துாதரான ஈஸா (அலை) ஒருநாள் மழையில் சிக்கினார். ஒதுங்குவதற்கு இடமே இல்லை. சிறிது துாரம் நடந்ததும் குடிசையை கண்டார். உள்ளே எட்டிப் பார்த்ததில் அங்கு ஒரு பெண் இருந்தாள். இதனால் ஏமாற்றம் அடைந்தவர் அங்கிருந்து நகர்ந்தார். பின் துாரத்தில் தெரிந்த மலைக்கு சென்றார். அங்கு குகையை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தார். ஆனாலும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம் அங்கு சிங்கம் ஒன்று கர்ஜித்தது. இதைக்கேட்டவர், ‘இறைவனே. உன்னுடைய படைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் இடத்தில் ஒதுங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு நீதான் இடங்களை அமைத்துக் கொடுத்திருக்கிறாய். ஆனால் எனக்கு மட்டும் இடம் இல்லையே’ என சொன்னார். இறைவன் உடனே செய்தியனுப்பினான். ஒதுங்குவதற்கு உமக்கா இடமில்லை. என்னுடைய அன்பு எப்போதும் உமக்கு உண்டு. இம்மை உமக்கு வேண்டாம். இம்மையின் ஆயுளைவிட மறுமையின் ஆயுள் பெரியது. இம்மையில் ஒரு மனிதனின் முழு ஆயுளை மறுமையில் ஒரு தினத்துக்கு ஒப்பிடலாம்.