கோட்டை கருப்பண்ணசாமி கோவிலில் விடிய விடிய நடந்த விருந்து; 3000 கிடாக்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2023 02:08
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டி கோட்டை கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவில் 3000க்கும் மேற்பட்ட ஆடுகள் நேர்த்திக்கடனாக வெட்டப்பட்டு விடிய விடிய விருந்து நடந்தது.
விராலிப்பட்டியில் கிராமத்திற்கு வெளியே கோட்டை கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அடுத்து வரும் வெள்ளிக்கிழமையில் கோயில் திருவிழா சிறப்பாக நடைபெறும். மற்ற நாட்களில் கோயிலுக்கு பெண்கள் அனுமதிக்கப்பட்டாலும் திருவிழா நாளில் பெண்கள் கிடா விருந்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை. நேற்று இரவு நடந்த விழாவில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண் பக்தர்கள் விராலிப்பட்டிக்கு வந்தனர். முன்னதாக ஆண்டுதோறும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக ஆடுகளை விட்டு செல்வர். இந்த ஆடுகளை கோயில் நிர்வாகமும் ஊர் மக்களும் பராமரிக்கின்றனர். திருவிழாவின்போது இந்த ஆடுகள் பலியிடப்படும். ஏற்கனவே காணிக்கையாக பெறப்பட்ட ஆடுகள் 2 ஆயிரத்துக்கு மேல் இருந்த நிலையில் நேற்றும் ஆடுகள் கொண்டுவரப்பட்டன. எழுவனம்பட்டியை சேர்ந்த பக்தர் முருகன் 60க்கும் மேற்பட்ட ஆடுகளை நேர்த்திக்கடனாக வழங்கினார்.
இது குறித்து முருகன் கூறுகையில்," நேர்த்திக்கடன் வேண்டி இருப்பதாக நினைத்த காரியம் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு 50 ஆடுகள், இந்த ஆண்டு கருப்பின் உத்தரவுப்படி 60 ஆடுகளை வழங்குகின்றேன். நினைத்த காரியம் நடைபெறுவதால் ஆண்டுதோறும் கிடாக்களை நேர்த்திக்கடன் ஆக வழங்கி வருகிறேன் என்றார். நேற்று இரவு 12 மணிக்கு ஆகாச பூஜை நடத்தப்பட்டு அதற்கு மேல் கிடாக்கள் வெட்டப்பட்டன. இதனை அடுத்து தயாராக இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட அடுப்புகளில் சமைக்கப்பட்டு பக்தர்களுக்கு விருந்தாக படைக்கப்பட்டது. கோயிலுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அசைவ உணவை பிரசாதமாக நினைத்து சாப்பிட்டனர். அதிகாலை சூரியன் உதிக்கும் வரை இந்த விருந்து நடைபெற்றது. சூரியன் உதிக்க துவங்குவதற்கு முன் கோயில் அருகே குழி தோண்டி மீதமாகும் உணவுகள், அக்குழிக்குள் கொட்டி மூடப்பட்டது. விராலிப்பட்டி விழாவிற்காக வத்தலக்குண்டு பெரியகுளம் திண்டுக்கல் நிலக்கோட்டை பகுதியிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. டிஎஸ்பி முருகன் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். திருவிழாவின் போது ஒலிபெருக்கிகள் கட்டப்படுவதில்லை. வான வேடிக்கைகளும் கிடையாது. அமைதியாக துவங்கி அமைதியாக முடிவது இத்திருவிழாவின் முக்கிய அம்சமாகும்.