பதிவு செய்த நாள்
26
ஆக
2023
10:08
ஆலாந்துறை: நல்லூர்வயலில் உள்ள மலைவாழ் மக்களின் குலதெய்வ கோவிலில் உள்ள அம்மன் சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நல்லூர்வயல்பதியை உள்ள மலைவாழ் மக்களின் குலதெய்வ கோவிலான சடையாண்டியப்பன் கோவில், வனப்பகுதியையொட்டி உள்ளது. சுமார், 300 ஆண்டு பழமையான இக்கோவிலில், சடையாண்டியப்பன், அம்மன், கன்னிமார் ஆகிய தெய்வங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், இக்கோவிலில், நேற்று வழக்கம்போல, பூஜை செய்ய பூசாரி ராம்கணேஷ் சென்றுள்ளார். அப்போது, 3½ அடி உயரம் கொண்ட அம்மன் சிலை சேதமடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இத்தகவல் பரவியதால், அப்பகுதியில் இந்து அமைப்பினர்கள், 20க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். அதன்பின், மலைவாழ் மக்கள், இதுகுறித்து காருண்யா நகர் போலீசில் புகார் அளித்தனர். தகவலறிந்து, பேரூர் டி.எஸ்.பி., ராஜபாண்டியன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து, காருண்யா நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கோவிலில், கடந்த 2017ம் தேதி, இதே அம்மன் சிலையை சேதப்படுத்தி திருட முயன்றுள்ளதும், 2022ம் ஆண்டு, 3 அடி உயரம் கொண்ட கருப்பராயன் சுவாமி சிலை திருடு போனதும் குறிப்பிடத்தக்கது.