பதிவு செய்த நாள்
26
ஆக
2023
05:08
திருச்சுழி: திருச்சுழி அருகே கல்விமடையில் முற்கால பாண்டியர்களின் சிற்பங்களை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
திருச்சுழி அருகே கல்விமடை கிராமத்தில் திருநாகேஸ்வரமுடையார் கோயில் உள்ளது. இங்கு பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் ஸ்ரீதரன், பேராசிரியர்கள் செல்லப்பாண்டியன், தாமரைக்கண்ணன் ஆகியோர் கள ஆய்வு செய்த போது பழமையான சிற்பங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது : முற்கால பாண்டியர்கள் வீரத்தில் மட்டுமல்ல பக்தியிலும் சிறந்து விளங்கினர். அவர்கள் கட்டிய கோயில் அதற்கு சாட்சி. கால ஓட்டத்தில் பல கோவில்கள் அழிந்து விட்டாலும் அவர்கள் கோவிலுக்காக செதுக்கிய சிற்பங்கள் மட்டும் ஆங்காங்கு அதிக அளவில் கிடைத்து வந்தது. இங்கே நாங்கள் கண்டறிந்த சிற்பங்கள் அனைத்தும் முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்தவை. மொத்தம் 8 சிற்பங்கள் உள்ளன. அவைகள் பிராமி, மகேஸ்வரி, சாமுண்டி, இந்திராணி, சுகாசனமூர்த்தி, முருகன், மார்க்கண்டேயர், சேத்திர பாலர். இதில் 2 சிற்பங்கள் முழுவதும் சேதம் அடைந்துள்ளது.
மிகச் சிறப்பான சிற்பம் மார்க்கண்டேயன் தான். சிவபெருமானின் அருளைப் பெற்று 16 வயதினிலேயே வாழும் அபூர்வ வரத்தை பெற்றவர். இந்த சிற்பத்தின் தலைப்பகுதி மட்டும் முழுவதும் சிதைக்கப்பட்டுள்ளது. கழுத்தில் ஆபரணங்களும் புஜங்களில் ஆபரணமும் அணிந்து உள்ளார். அர்த்த பரியங்காசனத்தில் அமர்ந்து இரண்டு கைகளையும் தொடை மீது வைத்து அறிவு முத்திரை காட்டுகிறார். இந்த முத்திரை கோல சிற்பம் மிகவும் அபூர்வமானது. அறிவு முத்திரையின் பொருள் தான் கற்ற கல்வி அறிவுகளை அனைவருக்கும் தானமாக வழங்கும் செய்திகளை சொல்கிறது. இந்த சிற்பத்தின் உயரம் இரண்டு அடி அகலம் ஒன்றரை அடியும் உள்ளது. முருகன் சிற்பம் பாதி உடைந்த நிலையில் உள்ளது. சுகாசன மூர்த்தியின் சிற்பம் இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டபடி உள்ளது. வலது காலில் பாதம் ஆனது தாமரை மலர் மேல் உள்ளது. இந்தச் சிற்பம் 5 அடி உயரம் இரண்டடி அகலத்தில் காணப்படுகிறது. சேத்திரபாலர் சிற்பம் மூன்றடிஉயரத்திலும் ஒன்றரை அடி அகலத்திலும் உள்ளது. சப்தமாதர் சிற்பங்களில் நான்கு சிற்பங்கள் மட்டும் உள்ளது. மூன்று சிற்பங்கள் இல்லை. இந்த நான்கு சிற்பங்கள் முறையே பிராமி, மகேஸ்வரி, இந்திராணி, சாமுண்டி இரண்டு இரண்டு சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முற்கால பாண்டியர் காலத்தில் சுகாசன கோலமானது வலது காலை மடித்து இடது காலை கீழே தொங்க விட்டபடி காட்சி தருவது அபூர்வமான ஒன்று. இந்த வகை சிற்பங்கள் எட்டாம் கால நூற்றாண்டை சேர்ந்தது.