ஆவணி மூல திருவிழாவில் பாண்டிய ராஜாவாக பங்கேற்க திருப்பரங்குன்றம் முருகன் புறப்பட்டார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2023 06:08
திருப்பரங்குன்றம்; மதுரையில் நடக்கும் ஆவணி மூல திருவிழாவில் பாண்டியராஜாவாக கலந்து கொள்ள சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து புறப்பட்டார்.
கோயிலில் எழுந்தருளியுள்ள கருப்பணசுவாமிக்கு பூஜை முடிந்து உற்சவர் சுப்ரமணிய சுவாமி, தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டது. தீபாராதனைக்கு பின்பு சர்வ அலங்காரத்தில் தங்க பல்லக்கில் சுவாமி, அம்மன் புறப்பாடாகி வழி நெடுகிலும் பக்தர்களின் மண்டகப்படிகளில் அருள்பாலித்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சென்றனர். அங்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிரியாவிடை சந்திப்பு, வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இரவு நரியை பரியாக்கும் நிகழ்ச்சியில் மதுரை சுவாமிகளுடன் குன்றத்து சுவாமிகள் பங்கேற்கிறார். ஆக. 30ல் ஆடி வீதிகளில் உலா நிகழ்ச்சி முடிந்து, மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிரியாவிடையிடம், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை விடை பெறும் நிகழ்ச்சி நடக்கும். ஆக. 31ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்புவர். இந்நாட்களில் திருப்பரங்குன்றம் கோயில் நடை திறப்பு, பூஜைகள் வழக்கம் போல் நடக்கும்.