பதிவு செய்த நாள்
28
ஆக
2023
05:08
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பேட்டரி கார்கள் பழுதாகி முடங்கி கிடப்பதால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி 2013 முதல் கோயில் நான்கு ரதவீதியில் வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர். இதனால் பக்தர்கள், கோயிலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்ததும் 1.5 கி.மீ., தூரமுள்ள நான்கு ரதவீதியை சுற்றி வந்த பிறகே, வாகனங்களுக்கு செல்ல முடியும். இதனால் வயது மூத்த பக்தர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலதரப்பினரும் சுட்டெரிக்கும் வெயிலில் ரத வீதியில் சிரமத்துடன் செல்கின்றனர். இதனை தவிர்க்க 2021ல் வங்கி, சமூகநல அமைப்பு மூலம் கோயில் நிர்வாகத்திடம் இலவசமாக 3 பேட்டரி கார்கள் வழங்கியது. இக்கார்கள் ரதவீதியில் பக்தர்களை ஏற்றி, இறக்கி விட்ட நிலையில், சில மாதம் பின் இரு கார் பழுது ஏற்பட்டு சரி செய்யவில்லை. இதனை காய்லாங் கடையில் எடை போடும் அளவுக்கு மூளையில் முடங்கி கிடக்கிறது. இதனால் பக்தர்கள் ரதவீதியில் மூன்று சக்கர சைக்கிள் மற்றும் நடந்து சென்றும் அவதிப்படுகின்றனர். பழுதான காரை சரி செய்ய முன்வராத கோயில் அதிகாரி மீது நடவடிக்கை எடுத்து, பக்தர்கள் நலன் கருதி புதிய பேட்டரி கார்கள் இயக்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.