பதிவு செய்த நாள்
02
செப்
2023
11:09
சிதம்பரம்; சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் துவங்கியது.
நடராஜர் வீற்றிருக்கும் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற தளமாக விளங்கி வருகிறது தில்லை காளியம்மன் கோவில். இக்கோவிலுக்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் நாளை மறுதினம், 4ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திருப்பணிகள் துவங்கி நடந்து வந்த நிலையில் தற்போது பணிகள் முழுமைபெற்று கும்பாபிஷேக பணிகள் துவங்கியுள்ளது. கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 30ம் தேதி காலை 7 மணிக்கு, ஹோமத்துடன் துவங்கியது. 31ம் தேதி காலை 8 மணிக்கு ஸ்ரீ மகா கணபதி ஹோமம், ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம், ஸ்ரீ நவகிரக ஹோமம், ஸ்ரீ தனபூஜை, மகா தீபராதனை நடந்தது. நேற்று மாலை 6 மணிக்கு முதல் யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து மகா பூர்ணாஹிதி வடுக பூஜை நடந்தது. இன்று காலை இரண்டாம் காலயாகசாலை பூஜையும், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், நாளை 3 ம் தேதி, நான்காம் கால யாகசாலை பூஜையும், மதியம் ஐந்தாம் கால பூஜை, இரவு ஆறாம் கால பூஜை நடக்கிறது.
விழாவின் முக்கிய நாளான 4ம் தேதி காலை 6 மணிக்கு கோபூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, மகா தீபாராதனையும். தொடர்ந்து கடயாத்தராதானம், தசதானம், பஞ்சதானம் நடக்கிறது. காலை 9 மணிக்கு புனித நீர் அடங்கிய கடம் புற்ப்பாடு நடைபெற்று, 10.30 மணிக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 5ம் தேதி முதல் 48 நாட்கள் மண்டலா அபிஷேக பூஜை துவங்குகிறது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை மற்றும் ஸ்தானிகர்கள். தில்லை நடராஜன், செந்தில்குமார், தில்லை நாயகன் ஆகியோர் செய்து வருகின்றனர். பூஜை பணிகளை கணேச தீட்சிதர், ராஜ்குமார், சக்தி கண்ணன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் எம்.ஆர்.கே, பொறியியல் கல்லுாரி சேர்மன் கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.