பதிவு செய்த நாள்
11
அக்
2012
10:10
சென்னை: பகைவரும் பாராட்டும் வாழ்க்கையே பரிசுத்தமானது. வள்ளலார் மற்றும் காந்தியின் வாழ்க்கை அத்தகையது என, அறிஞர்கள் பேசினர்.ராமலிங்கர் பணி மன்றம், ஏ.வி.எம்., அறக்கட்டளையுடன் இணைந்து மயிலாப்பூர் ஏ.வி.எம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில், அருட்பிரகாச வள்ளலார் - மகாத்மா காந்தி விழாவை 47 வது ஆண்டாக கொண்டாடியது. இந்த நிகழ்ச்சியின் நிறைவு விழா நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சியில் கோவை சிவப்பிரகாச சுவாமிகள் பேசியதாவது: மனிதன் குரங்கில் இருந்து பிறந்தான் என்று விஞ்ஞானம் சொல்கிறது. ஆனால், சைவ சித்தாந்தம் அப்படி எதையும் சொல்லவில்லை. ஞானிகள், சித்தர்கள், முனிவர்கள் போன்றவரெல்லாம், காட்டில் தான் வசிக்கிறார்கள். அவர்கள் ஏன் நாட்டில் வசிக்கவில்லை என்று தெரியுமா? காட்டில் உள்ள விலங்குகளை இது சிங்கம்.. இது புலி என்று இனங்கண்டு கொள்ள முடியும். ஆனால் நாட்டிலோ, மனிதர்களை முகங்களை வைத்து அவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்று பிரித்தறிவது கடினம் அல்லவா?இவ்வாறு அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து முனைவர் ஞான சுந்தரம் பேசியதாவது:மகாத்மா காந்தியும், வள்ளலாரும் பகைவரும் பாராட்டும் படி வாழ்ந்தவர்கள். அது தான் உன்னதமான வாழ்க்கை என்று இந்த உலகிற்கு உரக்கச் சொன்னார்கள். இன்றைய கால கட்டத்தில் இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை நம்மால் நினைத்து பார்க்க முடிகிறதா? இந்த உலகில் காசே இல்லாமல் வாழ்ந்து காட்டிய உண்மையான துறவி வள்ளலார். ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு பொன்னை பார்த்தாலே கைகள் எல்லாம் நடுங்குமாம்.பற்றற்ற துறவிகள்இப்போதெல்லாம், ஏராளமான பணம் வைத்திருப்பவர்களே துறவி என்றாகி விட்டது. பொன்னையும், பொருளையும் போலீஸ் கைப்பற்றுவது இப்போதெல்லாம் பெரும்பாலும் மடாலயங்களில் தான். நம் மகான்கள் எல்லாம் நமக்கு வாரி வழங்கியது, இந்த எளிமையான வாழ்க்கை முறையை மட்டுமே. இந்த உலகில் எத்தனையோ வள்ளல்கள் வாழ்ந்தார்கள். ஒருவர் மட்டுமே வள்ளலார் என்று அழைக்கப்படுகிறார். கடைசி வகுப்பு மதுரையில் ஒரு விவசாயியைப் பார்த்து, அவர் அணிந்திருந்த அதே அளவு ஆடையே தனக்குப் போதும் என்று முடிவெடுத்து, அதன் படியே தன் கடைசிக் காலம் வரை வாழ்ந்தும் காட்டினார் மகாத்மா காந்தி. காந்தீயத்தின் உயிர் நாடியாக இருந்தது எளிமையே. அரசியல் வாதிகள் எல்லாம், அடுத்த தேர்தலை மனதில் கொண்டு செயல்படுகிறார்கள். அடுத்த தலைமுறையை பற்றி யாருக்கும் கவலை இல்லை.எது அகிம்சை?இந்த உலகில் உள்ள எல்லா உயிர்களையும் கொல்லாமல் இருப்பது தான் அகிம்சை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தெருவில் உள்ள நாய், குரங்கு போன்றவை கடிக்க வந்தால் அமைதியாக இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. கொசு தானே.. கடித்து விட்டு போகட்டும் என்று அதை அடிக்காமல் விட்டால், அது நம்மை அழித்து விடும். பல் துலக்க வேப்பமரத்தில் இருந்து ஒரு குச்சியை ஒடிக்கலாம். ஆனால், நம் தேவையைத் தாண்டி ஒரு இன்ச் கூட அதிகமாக அதை உடைக்கக் கூடாது.நம் நாட்டில் கள்ளுக்கடையும், சாதிய முறையும் முற்றிலும் ஒழிக்க முடியாத வரை, இது போன்ற விழாக்கள் எல்லாம் வெறும் பொழுதுபோக்கு அம்சங்களாக மட்டுமே இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.ஊரன் அடிகள் தனது நிறைவுறையில், "" இந்து மதத்தைப் பொறுத்தவரை சைவம், வைணவ பேதங்கள் இன்று தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இவற்றை களையும் வரை, நாம் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான சாத்தியங்கள் குறைவு.மனிதனின் மனதில் ஏராளமான ஆசைகள் புதைந்துண்டு கிடக்கின்றன. நம் ஆன்மாவை ஏராளமான திரைகள் மறைக்கின்றன. நாம் அனைவரும் அந்த திரையை விலக்கி, மனதைக் கண்ணாடி போல வைத்திருக்க வேண்டும். நம் ஆன்ம ஒளிக்குள், இறைவனின் அருள் ஒளியை ஏற்ற வேண்டும். ஒளி மற்றும் வெளியிலேயே தான் பேரின்பத்தை அடைய முடியும். இந்த உலகில் உள்ள புற ஒளிகளை விட, உள்ளொளியை உணர்தலே மிக மிக முக்கியமானது. அந்த பிரகாசத்தை அடையும் வழிமுறையை தான், வள்ளலார் நமக்கு சொல்லித் தருகிறார், என்றார்.கலைமகன் இறை வணக்கப்பாடல் பாடினார். முனைவர் அவ்வை நடராசன் வரவேற்று நன்றி கூறினார்.