இஸ்லாத்தை பற்றி மக்களுக்கு சொல்லலாம் என ‘தாயிப்’ என்னும் ஊருக்கு சென்றார் நபிகள் நாயகம். அங்கே ஒரு குடும்பத்தில் மூன்று சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரான ஜைதுப்னுஹாரிதாவிடம் இஸ்லாத்தை பற்றி கூறினார் நாயகம். அதற்கு மூவரும் கூறிய பதில்கள். முதலாமவர்: நபியாக உம்மை இறைவன் அனுப்பி இருந்தால் நல்ல உடையும், சவாரியும் தந்திருக்கமாட்டானா என்றார். இரண்டாமவர்: இறைவனுக்கு உம்மைத் தவிர வேறு ஒருவரும் கிடைக்கவில்லையா எனக்கேட்டார். மூன்றாமவர்: உம்மோடு எக்காரணத்தைக் கொண்டும் நான் பேச இயலாது என சொன்னார். அதோடு அவர்கள் நிற்கவில்லை. ஊரில் உள்ள மக்களிடம் நாயகத்தை கேலி செய்யும்படி துாண்டிவிட்டனர். இதனால் மக்களும் ஒன்றுகூடி அவரை ஏளனம் செய்தனர். ஒருகட்டத்தில் அவர் மீது கற்களை வீசினர். அவர் அருகில் இருந்த திராட்சை தோட்டத்திற்கு சென்றார். அவரது நிலையை பார்த்த தோட்டத்தின் உரிமையாளர் பழங்களை கொடுத்தார். இளைப்பாறிய நபிகள் நாயகம் பிரார்த்தித்தார். ‘நான் கேவலப்படுத்தப்படுவதை உன்னிடமே முறையிடுகிறேன். நீயே பலவீனர்களைக் காப்பாற்றுபவன். என்னை யாரிடத்தில் ஒப்புவிப்பாய்? என்னைக் கொடுமைப்படுத்தும் அந்நிய விரோதியிடத்திலா... அல்லது எனக்கு ஒத்துழைக்கும் நபர்களிடத்திலா... என் பிரச்னைகளை உன் விருப்பம் போல் தீர்த்து வைப்பாயாக. உன்னையன்றி எனக்கு வேறு சக்தியும் இல்லை, உதவியும் இல்லை’