தொழுகையை இறைவன் இஸ்லாமியருக்கு கடமையாக்கியுள்ளான். எவர் சிறந்த முறையில் ஒளு செய்து, தொழுகைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுகிறாரோ, எவருடைய உள்ளம் தொழுகையில் பணிந்திருக்கிறதோ அவரை மன்னிப்பது அவனது பொறுப்பாகும். இது குறித்து நபிகள் நாயகம் கீழ்க்கண்டவாறு கூறுகிறார். ‘எவர் தம் தொழுகைகளைச் சரியான முறையில் பேணி வருகின்றாரோ அவருக்கு, அவரது தொழுகையே இறுதித் தீர்ப்பு நாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் அமையும். ஈடேற்றத்திற்கு சாதனமாக இருக்கும். இந்த நபிமொழியில் ‘முஹாஃபளத்’ எனும் வினைச்சொல் உள்ளது. இதன் பொருள் கவனித்தல், கண்காணித்தல், பேணுதல் என்பதாகும். தொழுகின்ற மனிதன் ஒழுங்காக ஒளு செய்தோமா, குறித்த வேளைக்குள் தொழுகின்றோமா, ருகூஉ, ஸுஜூது ஆகியவற்றின் நிலை என்ன என்றும் கவனிக்க வேண்டும். (ருகூஉ: தொழுகையின்போது கைகளை முழங்காலில் வைத்துக் கொண்டு குனிந்து நிற்கும் நிலை, ஸுஜூது: தொழுகையில் இரு உள்ளங்கைகளையும் தரையில் ஊன்றிக் கொண்டு முழந்தாளிட்டு, நெற்றியை பூமியில் வைத்து வழிபடும் நிலை) இறுதியாக தொழுகையின்போது மனம் உலக விஷயத்தில் சிக்கி தடுமாறுகிறதா... அல்லது இறைவனின் பக்கம் கவனத்தைச் செலுத்துகிறதா... என கண்காணிக்க வேண்டும். யாருடைய மனம் இவ்வாறு இருந்ததோ அவர் வாழ்க்கையின் பிற விவகாரங்களிலும், மறுமையிலும் வெற்றி அடைவார்.