பதிவு செய்த நாள்
05
செப்
2023
12:09
ஆழ்வார்திருநகரி: துாத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதி கோயில்களில் ஒன்பதாம் திருப்பதியான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் ஆண்டுதோறும் பவுத்ரோத்ஸவம் நடைபெறுவது வழக்கம். கோயில்களில் தினசரி நடைபெறும் பூஜை புனஸ்கார முறைகளில் ஏதாவது விடுதல்கள் இருப்பின் அதற்கு பரிகாரமாக பவுத்ரோத்ஸவம் நடத்துவதும் வழக்கம். எட்டு நாள் நடைபெறுகின்ற இந்த உத்ஸவத்தில் 8 ம் நாளான நேற்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம், 7.30 மணிக்கு திருமஞ்சனம், 9 மணிக்கு சிறப்பு ஹோமம், 11 மணிக்கு பூர்ணாகுதி, நாலாயிர திவ்யப்பிரபந்த சேவைகள் நடந்தன. பகல் 12 மணிக்கு சாத்துமுறை, தீர்த்தம், சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சாயரட்சை, 5.30 மணிக்கு ஹோமம், 6.30 மணிக்கு வாகன குறட்டற்கு சுவாமிகள் பொலிந்து நின்றபிரான் மற்றும் நம்மாழ்வார் எழுந்தருளினார்கள். இரவு 7 மணிக்கு பொலிந்து நின்றபிரான் நம்மாழ்வார் இருவரும் வெட்டி வேர் சப்பரத்தில் காட்சியளித்தனர். பின்னர் மாட வீதி புறப்பாடு நடந்தது. இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் கண்ணன், விவேக் ரங்கராஜன். எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள்,நிர்வாக அதிகாரி அஜித் ,தக்கார் கோவல மணிகண்டன், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, காரியமாறன் கலைக் காப்பக தலைவர் ரெங்கராஜன் உட்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.