அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே கல்லூரணி காட்டுப்பகுதியில் புராண கால காத்தவராயன் சிற்பத்தை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே கல்லூரணி காட்டுப்பகுதியில் மிகவும் பழமையான சிற்பம் இருப்பதாக அந்த ஊரைச் சேர்ந்த செல்வகணேஷ், கல்லூரி மாணவர் ஜோஸ்வா ஆகியோர் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் செல்லப்பாண்டியன், தாமரைக்கண்ணன், ஸ்ரீதர் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சென்று நேரில் ஆய்வு செய்த பின் கூறியதாவது : இந்தச் சிற்பம் புராணங்களில் சொல்லப்படக்கூடிய காத்தவராயனின் சிற்பம். இவருக்கு காத்த வீரிய அர்ஜுனா, சகஸ்ரார்ஜீனா என பல்வேறு பெயர்கள் உள்ளன. இவர் மகிஷ்மதி நதிகரையில் உள்ள மகிஷ்மதி நகரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தவர். மிகப்பெரிய வீரர். ஆயிரம் கரங்களை உடையவராகவும், தத்தாத்ரேயரின் சிறந்த பக்தரும் ஆவார். புராணங்களின்படி இவர் சுதர்சன சக்கரத்தின் அவதாரமாக கருதப்படுகிறார். இவரது பெயர் ரிக் வேதத்தில் காணப்படுகிறது. இவர் ராவணனின் சமகாலத்தை சேர்ந்தவராக கருதப்படுகிறார்.
இவர் இலங்கை மீது படையெடுத்தார். இருவருக்கும் நடந்த போரில் இராவணன் தோற்கடிக்கப்பட்டு சிறை வைக்கப்படுகிறார். ராவணனை தோற்கடித்த மிகப்பெரிய வீரன் என்று புராணங்களில் கூறப்படுகிறது. நாங்கள் கண்டுபிடித்த சிற்பத்தின் தலை சிதைக்கப்பட்டுள்ளது. தலை இல்லாமலேயே சிற்பத்தின் உயரம் 5 அடியும், அகலம் 2 அடியுமாக உள்ளது. வலது கை முழுவதும் சிதைக்கப்பட்டுள்ளது. இடது கையை ஹடிஹஸ்தமாக வைத்துள்ளார். இவர் கழுத்தில் நிறைய ஆபரணங்கள் அணிந்து உள்ளார். குறிப்பாக காரை பூ என்ற ஆபரணத்தை அணிந்து உள்ளார். இந்த ஆபரணத்தை அணிந்தவர் இவர் ஒருவர் மட்டுமே. சிற்பத்திற்கு தலை இல்லாவிட்டாலும் இவர் அணிந்துள்ள ஆபரணத்தை வைத்து இவர் காத்த வீரிய அர்ஜுனன் தான் என்று உறுதியாக சொல்லலாம். முற்கால பாண்டியர்கள் ஆன்மீகத்திலும் கோயில் கட்டட கலையிலும் சிற்பக்கலையிலும் சிறந்து விளங்கினார்கள் என்பதை இதுபோன்ற சிற்பங்களால் பார்த்து அறிய முடிகிறது. இந்தச் சிற்பம் 9 ம் நூற்றாண்டை சேர்ந்தது, என்று கூறினர்.