பதிவு செய்த நாள்
09
செப்
2023
10:09
ஓசூர்: ஓசூரில், விநாயகர் சதுர்த்தி விழா தற்போதே களை கட்ட துவங்கி விட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை தாலுகாவில், விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஒரு வாரம் சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின், நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. வரும், 19ல் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஹைதராபாத் உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து, பிரமாண்டமான விநாயகர் சிலைகளை இளைஞர்கள் மற்றும் ஹிந்து அமைப்பினர் பலர் தற்போதே வாங்கி வர துவங்கி விட்டனர். பல இடங்களில், விநாயகர் சிலை வைக்கும் பணியை இளைஞர்கள் செய்து வருகின்றனர். களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை விட, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் செய்யப்பட்ட சிலைகளே தத்ரூபமாக இருக்கும் என்பதால், ஓசூர் மக்கள் அவற்றை வாங்கி வருகின்றனர். இது தவிர, சினிமா கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு, செட் அமைப்பதற்கான பணிகள் துவங்க உள்ளன. விநாயகர் சதுர்த்தியின் போது பிரதிஷ்டை செய்ய உள்ள சிலைகளை வரும், 24 ல், நீர்நிலைகளில் கரைக்க இளைஞர்கள், ஹிந்து அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். சிலைகளை வைக்க, போலீசாரிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்பதால், அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.