பதிவு செய்த நாள்
09
செப்
2023
05:09
பல்லடம்: பல்லடம் பாலதண்டாயுதபாணி கோவில் திருப்பணி தாமதமடைந்து வருவது, பக்தர்கள் மத்தியில் கவலையை அழித்து உள்ளது.
பல்லடம், மங்கலம் ரோட்டில் விநாயகர் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவில், நூற்றாண்டு பழமை வாய்ந்தது. நீண்ட காலத்துக்குப் பின் இக்கோவில் புனரமைக்க திட்டமிடப்பட்டது. இதன்படி, பாலா ஆலயம் செய்யப்பட்ட பின், பழைய கோவில் கட்டடங்கள் இடித்த அகற்றப்பட்டன. புதிய கோவில் கட்டுமான பணி துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திருப்பணி தாமதமாகி வருவது பக்தர்களை கவலை அடையச் செய்துள்ளது. இது குறித்து பக்தர்கள் கூறுகையில், ’பொதுமக்கள் பலரின் பங்களிப்புடன்தான் கோவில் திருப்பணி துவங்கி நடந்து வருகிறது. கோவில் இடித்து அகற்றப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும், திருப்பணி துவங்கவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால், திருச்சியில் இருந்து கோவில் ஸ்தபதி வர வேண்டும் என்று கூறுகின்றனர். ஸ்தபதி வர தாமதம் ஆகி வருவதால், திருப்பணி மேற்கொள்வதில் இடையூறு ஏற்பட்டு வருகிறது. திருப்பணியை விரைந்து முடிக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இது குறித்து கோவில் செயல் அலுவலர் ராமசாமியிடம் கேட்டதற்கு, ’பல்லடம் பகுதியில், 10க்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணி நடந்து வருகிறது. ஆகம விதிமுறைகளின்படிதான் கோவில் திருப்பணி மேற்கொள்ள முடியும். எனவே, இன்ஜினியர்களிடம் கட்டட அனுமதி, ஸ்தபதி அனுமதி உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றியாக வேண்டி உள்ளது என்றார்.