பதிவு செய்த நாள்
12
அக்
2012
10:10
உடன்குடி: குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் சூரம்சம்காரம் நடைபெறும் இடத்தை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். கடற்கரையில் குவிந்துள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவிற்கு சுமார் 30 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள். ஆனால் கோயிலில் செய்யப்படும் ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகள் வந்து பார்ப்பதில்லை குறிப்பாக மாவட்ட கலெக்டர் லட்சகணக்கான பக்தர்கள் குவியும் தசரா திருவிழாவிற்கு முக்கியத்தும் கொடுப்பதில்லை என தசரா ஆலோசனைக் கூட்டத்தின் போது புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயிலை கிராமக் கோயில் என்ற கிரேடில் வைத்திருப்பதால் பெரிய கோயில்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகள் இக்கோயிலுக்கு கிடைக்கவில்லை என பக்தர்கள் புகார் கூறினார். இந்த வருடம் கோயில் திருவிழா குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் தலைமையில் திருவிழா குறித்து ஆலேசனை கூட்டம் நடந்தது. இதில் பல லட்சம் பக்தர்கள் கூடும் திருவிழாவில் அரசு சார்பில் செய்யப்படும் ஏற்பாடுகள் குறித்து இந்து முன்னனி மற்றும் இந்து மக்கள் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் தங்களது கருத்துக்களை கூறினர். மேலும் மாவட்ட கலெக்டர் ஒரு முறை சூரசம்ஹாரம் நடைபெறும் இடம் மற்றும் வாகனங்கள் வந்து செல்லும் ரோடுகளை பார்வையிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் குமார் உடன்குடி பஜாருக்கு வருகை தந்தார். திசையன்விளை மற்றும் அதனைசுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வரும் வாகனங்கள் எவ்வாறு செல்ல வேண்டும் என்பது குறித்து ஆய்வு நடத்தினார். பின்னர் குசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயிலுக்குச் சென்றார். கோயில் நிர்வாக அதிகாரி சங்கர் வரவேற்றார். கோயில் அருகில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருச்செந்தூர் டிஎஸ்பி ஞானசேகரிடம் கேட்டறிந்தார். பின்னர் சூரம்சம்ஹாரம் நடைபெறும் கடற்கரைக்குச் சென்றார். அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். மேலும் பொது சுகாதாரம், கழிப்பிடம், பழுதான ரோடுகளை உடனடியாக செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். கோயில் மற்றும் கடற்கரை பகுதியில் மக்கள் கூடும் இடங்களில் ஜெனரேட்டர் வசதி செய்து மின் விளக்கு எரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதில் உடன்குடி பஞ்., யூனியன் துணைச் சேர்மன் ராஜதுரை, குலசேகரன்பட்டணம் பஞ்., தலைவர் பெருமாள், உடன்குடி பஞ்., யூனியன் ஏபிடிஒ வேல்மயில், பஞ்., எழுத்தர் ரசூல்தீன், உடன்குடி பஞ்., யூனியன் கவுன்சிலர்கள் பிரபாகர் முருகராஜ், ரகுமான், இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் சக்திவேலன், சுடலைமுத்து, சிதம்பரம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.