திருவனந்தபுரத்தில் மன்னர் பாரம்பரிய நவராத்திரி விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2012 10:10
நாகர்கோவில்: மன்னர் கால பாராம்பரியத்தின் அடிப்படையில் திருவனந்தபுரத்தில் வரும் 15-ம் தேதி தொடங்க உள்ள நவராத்திரி பூஜைக்காக கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சரஸ்வதிதேவி மற்றும் சுவாமி விக்ரகங்கள் யானை மீது ஊர்வலமாக புறப்பட்டு சென்றது. பண்டைய காலத்தில் திருவிதாங்கூர் ராஜ்யத்தின் தலைநகராக கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்மனாபபுரம் விளங்கியது. இங்குள்ள அரண்மனை வளாகத்தில் சரஸ்வதி கோயில் உள்ளது. இது கவியரசர் கம்பர் வழிபட்ட சரஸ்வதிதேவி சிலை என்று வரலாறு கூறுகிறது. மன்னர்கள் காலத்தில் இக்கோயிலில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. பின்னர் நிர்வாக வசதிக்காக 1840-ம் ஆண்டு சுவாதி திருநாள் மன்னர் காலத்தில் தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னரும் நவராத்திரி விழா தடையின்றி நடப்பதற்காக மன்னர் உத்தரவு படி சரஸ்வதிதேவி சிலை யானை மீது பவனியாக திருவனந்தபுரம் எடுத்து செல்லப்பட்டது. மன்னர் ஆட்சி மறைந்த பின்னரும், அந்த மரபு மறக்கப்படாமல், இரு மாநிலங்களுக்கிடையே பல பிரச்னைகள் இருந்தாலும் இந்த விழா இருமாநிலங்களை இணைக்கும் விழாவாக நடைபெற்று வருகிறது. வரும் 15-ம் தேதி நவராத்திரி பூஜை தொடங்க உள்ளதை ஒட்டி நேற்று காலையில் பத்மனாபபுரத்தில் இருந்து சுவாமி பவனி புறப்பட்டது. கேரள போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் இந்த ஊர்வலம் புறப்பட்டது. சரஸ்வதிதேவியுடன், வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை விக்ரகங்களும் இந்த பவனியில் எடுத்து செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்துக்கு முன்னால் மன்னர் பயன்படுத்திய உடைவாள் எடுத்து செல்லப்பட்டது. இந்த வாளை கேரள பண்பாட்டுத்துறை அமைச்சர் ஜோசப் எடுத்துக்கொடுக்க தேவசம்போர்டு இணை ஆணையர் ஞானசேகரன் பெற்றுக்கொண்டார். இதில் புஷ்பலீலா ஆல்பன் எம்.எல்.ஏ பத்மனாபபுரம் நகராட்சி தலைவி சத்யாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பவனி வரும் 14-ம் தேதி திருவனந்தபுரம் சென்றடையும். அப்போது பத்மனாபசுவாமி கோயில் முன்புறம் மன்னர் மார்த்தாண்டவர்மா இந்த பவனியை வரவேற்று அழைத்து செல்வார். 15-ம் தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது.