பதிவு செய்த நாள்
12
அக்
2012
12:10
நவராத்திரி விரதம் முழுக்க முழுக்க பெண்மைக்கு உரியது. "நவம் என்ற சொல்லுக்கு "ஒன்பது என்றும், "புதியது என்றும் பொருள் உண்டு. மீண்டும் மீண்டும் புதிது புதிதாக இந்த விழா ஆண்டுதோறும் மாற்றங்களுடன் கொண்டாடப்படும். இதை அனுசரித்தே முன்னோர்கள் நவராத்திரி என்று பெயர் சூட்டியுள்ளனர். ஒருநாளில், பகல் பாதி சிவபிரானின் அம்சம். இரவு பாதி அம்பாளின் அம்சம். பகலும் இரவும் இணையாவிட்டால் நாள் என்பது இல்லை. இதில் தேவியைக் கொண்டாடுவதற்கு ஏற்ற நேரம் இரவு. பகலில் உயிர்த்தெழுந்த உயிர்களை, இரவு வடிவான தேவி அமைதியில் ஆழ்த்தி, (உறங்கச்செய்து) தாலாட்டுகிறாள். உயிர்கள் அனைத்தும் உறங்கும் காலத்தில், தான் உறங்காமல் இருந்து அவற்றைக் காப்பாற்றுகிறாள். வேதத்தில், "சகல பூதங்களையும் பெற்றவளே! பகவதியே! கருமையானவளே! இரவானவளே! உன்னை வணங்குகின்றேன் என அம்பாளைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. வேதங்கள் காட்டிய வழியில் நாமும் இரவு காலத்தில் அவளைக் கொண்டாடுகிறோம்.
*நவராத்திரி நாட்களில் குடும்பத்தினர் அனைவரும் அதிகாலையிலேயே நீராடி கூட்டுபிரார்த்தனை செய்யுங்கள். * பூஜையறையைச் சுத்தம் செய்து, கொலு மேடை, பூஜையறையில் "லட்சுமித்தாயே! உன்னருளால் உலக உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்று பிரார்த்தித்து ஐந்துமுகம் விளக்கேற்றி, சாம்பிராணி, பத்தி ஏற்றி வையுங்கள். இதனால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும்.
* குழந்தைகளுக்கு தெய்வீக விஷயங்களைக் கற்றுக் கொடுங்கள். அபிராமி அந்தாதியில் ஒரு பாடலை மனப்பாடம் செய்யச் சொல்லுங்கள்.
* கொலு பார்க்க வரும் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், மலர்ச்சரம் கொடுத்து வழியனுப்புங்கள். . இதனால் நம் இல்லம் செழிக்கும்.
* பசுவிற்கு அருகம்புல், அகத்திக்கீரை கொடுத்து, மும்முறை வலம் வந்து வழிபட்டால் மூன்று தேவியை வழிபட்ட பலன்.
* ஆதரவற்ற குழந்தைகளுக்கு, முதியோர்களுக்கு உதவி செய்யுங்கள். இதனால் அம்மன் மனம் குளிர்ந்து வேண்ம் வரம் தருவாள்.
* அம்மன் கோயில்களில் விளக்கேற்றுங்கள். மாலையில் விளக்குபூஜை நடத்துங்கள். கன்னிப் பெண்கள் துர்க்கை சந்நிதியில் விளக்கேற்றி வழிபட்டால் விரைவில் திருமணம்.
ஒரு நாள் கும்பிட்டா...ஒன்பது நாள் கும்பிட்ட பலன்: நவராத்திரி ஒன்பது நாட்களிலும் பூஜை நடத்த இயலாவிட்டால் அஷ்டமி திதிவரும் தினத்தன்று மட்டுமாவது அவசியம் பூஜிக்க வேண்டும். ஏனென்றால் தட்சனின் யாகத்தை அழித்த பத்ரகாளியானவள் அநேககோடி யோகினிகளோடு தோன்றிய தினமாகையால் அன்று பூஜைகளை விசேஷமாகச் செய்ய வேண்டும். அதே அஷ்டமி தினத்தன்றுதான் மகாமாயையான துர்க்கை நந்தகோபன் இல்லத்தில் அவதரித்தாள். ஆகவே துர்க்காஷ்டமி மிகுந்த விசேஷமுடையது.
சுண்டல் நிவேதனம்: நவராத்திரியில், அம்பாளுக்கு விதவிதமான சுண்டல், பாயாச வகைகள் நிவேதனம் செய்யப்படுகிறது. அறிவியல் ரீதியாகவும் இதற்கு காரணம் உண்டு.. தேவர்களுக்கு சிவன், விஷ்ணு அமிர்தம் தந்து, அவர்களை காத்தது போல, பூமி உயிர்வாழ "மழை என்னும் அமிர்தத்தைத் தருகிறார்கள். இதனால் பூமி "சக்தி பெறுகிறது. அந்த சக்தி எனும் பெண்ணுக்கு, பூமியில் விளைந்த விதவிதமான தானியங்கள் பக்குவப்படுத்தப்பட்டு நிவேதனம் செய்யப்பட்டது. அதில் சுண்டல் பிரதான இடம் பெற்றது. நவராத்திரி காலமான புரட்டாசி, ஐப்பசியில் அடைமழை ஏற்படும். இதனால் தோல்நோய் போன்றவை அதிகமாகும். இதைப் போக்கும் சக்தி சுண்டலுக்கு உண்டு.