பதிவு செய்த நாள்
16
செப்
2023
01:09
சென்னை: ஹிந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில், சென்னை பூக்கடை, சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து திருப்பதி திருக்குடை ஊர்வலம் துவங்கியது.
மக்களின் வாழ்வாதாரமான உணவு உற்பத்திக்குத் தேவையான மழையை, போதிய அளவு தரும்படி இறைவனிடம் வேண்டி, திருப்பதி ஏழுமலையானுக்கு, வெண்பட்டு திருக்குடைகளை காணிக்கையாக வழங்கும் சம்பிரதாயம், நுாற்றாண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தில் இருந்து வருகிறது. ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில், புதிய வெண்பட்டுக் குடைகள், ஆண்டுதோறும் சென்னையிலிருந்து பாதயாத்திரையாக எடுத்து வந்து, பிரம்மோற்சவத்தின் போது, திருமலையில் சமர்ப்பிக்கப் பட்டு வருகிறது. இந்த ஆண்டு, இன்று செப்., 16ல், சென்னை, சென்னகேசவ பெருமாள் கோவிலில் இருந்து, திருக்குடை ஊர்வலம் புறப்பட்டது. வழிநெடுக லட்சக்கணக்கான மக்கள், திருக்குடைகளுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வழிபட்டனர். அயனாவரம், வில்லிவாக்கம், திருமுல்லைவாயல், திருவள்ளூர் வரை திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, வரும் 21ம் தேதி திருக்குடைகள் திருமலையை சென்று அடைகிறது. ஹிந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி கூறுகையில், ஆதிசேஷனின் அம்சமான திருக்குடைகள், 150 ஆண்டுகளாக தமிழகத்திலிருந்து வழங்கப்பட்டு வருகின்றன. 20 லட்சம் பக்தர்கள், இந்த திருக்குடைகளை, பெருமாளின் அம்சமாகவே கருதி, பயபக்தியுடன் வழிபட்டனர். இதற்கான செலவுகள் அனைத்தையும் ஹிந்து தர்மார்த்த சமிதியே ஏற்று நடத்துகிறது, என்றார்.