பதிவு செய்த நாள்
19
செப்
2023
10:09
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருப்பதியில், பிரமோற்சவம் விழா துவங்கியது.
மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் ஊராட்சி, தென்திருப்பதியில் வேங்கடேஸ்வர வாரி கோவில் உள்ளது. கோவிலில் வருடாந்திர பிரமோற்சவம் விழா, நேற்று முன்தினம் அங்குரார்ப்பணத்துடன் தொடங்கியது. நேற்று மாலை, 6:15 மணிக்கு, கொடியேற்றம் நடந்தது. கோவில் முன்புள்ள கொடி மரத்தில், கருடாழ்வார் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. இரவு, 8:30 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி, பெரிய சேஷ வாகனத்தில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று காலையில் சின்ன சேஷ வாகனம், மாலையில் அன்னபட்சி வாகனம், 20ம் தேதி காலையில் சிம்ம வாகனம், மாலையில் முத்து பந்தல் வாகனம், 21ல் காலையில் கல்ப விருட்ச வாகனம், மாலையில் சர்வ பூபால வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. 22ம் தேதி காலை ஸ்ரீ வாரி வேங்கடேச சுவாமிக்கு, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் மாலை சமர்ப்பிக்கும் வைபவமும், அதைத் தொடர்ந்து மலைப்ப சுவாமி மோகினி திருக்கோளத்தில் திருவீதி விழாவும், மாலையில் கருட சேவையும் நடைபெற உள்ளது. 23ம் தேதி காலை அனுமந்த வாகனமும், மாலை தங்க ரதமும், 24ம் தேதி காலை சூர்ய பிரபை வாகனமும், மாலை சந்திர பிரபை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அதை தொடர்ந்து, 25ம் தேதி காலை, 8:00 மணிக்கு தேரோட்டமும், இரவு குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும், 26ம் தேதி மாலை கொடி இறக்கம் வைபவம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கே.ஜி., நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.