பதிவு செய்த நாள்
21
செப்
2023
04:09
சூலூர்: சூலூரில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், 100 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.
சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஹிந்து முன்னணி, ஹிந்து மக்கள் கட்சி, பொதுமக்கள் சார்பில், 100 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. நேற்று முன் தினம் காலையில் இருந்தே பொதுமக்கள் விநாயகர் சிலைகளை நொய்யல் ஆற்றங்கரையில் கரைக்க துவங்கினர். தொடர்ந்து தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், சீரணி கலையரங்கில் பொதுக்கூட்டம் நடந்தது. ராஜதேவேந்திர சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். எம்.எல்.ஏ., கந்தசாமி, மாநில இணை பொதுச்செயலாளர் விஜயகுமார், குமரேசன், சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சூலூர் பெருமாள் கோவில் திடலில் நடந்த ஹிந்து முன்னணி பொதுக்கூட்டத்தில், சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்க தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார். ஹிந்து வியாபாரிகள் நல சங்க மாவட்ட தலைவர் முருகானந்தம், பா.ஜ.,மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனிசாமி, ஹிந்து முன்னணி நிர்வாகிகள் ராஜ்குமார் மதன் குமார், பா.ஜ., நிர்வாகிகள் ரவிக்குமார், சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு விசர்ஜன ஊர்வலம் துவங்கியது. 100 க்கும் மேற்பட்ட சிலைகள், நொய்யல் ஆற்றங்கரையில் விசர்ஜனம் செய்யப்பட்டன.