பதிவு செய்த நாள்
22
செப்
2023
12:09
யாராவது நம்மை குறை சொன்னால் நம் மனம் வாடுகிறது. கோபப்படுகிறது. ஒரு சில நாளாவது புலம்புகிறது. ஆனால் காலம் காலமாக நம் தர்மத்தை, கலாசாரத்தை, மரபை, பண்பாட்டை, ரிஷிகள் தந்த பொக்கிஷத்தை, வாழ்வியல் நெறியை சிலர் குறை சொல்கிறார்கள். அதை எவரும் பொருட்படுத்துவதில்லை. ஏன்... ஹிந்து மதத்தை பற்றி அவர்களுக்கு தெரியாததே காரணம். சனாதன தர்மம் – இந்தப் பெயரே பலருக்கு புதிதாக இருக்கிறது. உலகம் தோன்றியது முதலே நிலையாக இருப்பதும், மனிதனை மனிதனாக வாழச் செய்யும் அறநெறியே சனாதனம். சுவாமி ஓங்காரானந்தர் இது பற்றி, ‘சனாதன’ என்றால் ‘நிலையானது’ ‘அழிவு இல்லாத அறம்’ என்று பொருள். ஆங்கிலத்தில் இதை ‘eternal’ என்பர். பொய் பேசாதிருத்தல், பிறரைப் பற்றி அவர் இல்லாத போது குறை சொல்லாதிருத்தல், யாருக்கும் துன்பம் செய்யாதிருத்தல் போன்ற ஒழுக்கங்களே சனாதனம். சுருக்கமாகச் சொன்னால் நல்வாழ்வுக்கான வழிகளைச் சொல்வது சனாதனம். மற்ற மதங்கள் நம் நாட்டிற்கு வந்த பின்னர் சனாதன தர்மத்திற்கு ஆங்கிலேயர்கள் சூட்டிய பெயர் ஹிந்து மதம். விநாயகர், முருகன், சிவன், சக்தி, திருமால், சூரியன் என ஆறு கடவுளரையும் இணைத்து ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட வழிபாட்டு முறைகளே சனாதன தர்மம். ‘‘தெருவில் ஒரே ஒரு சிவராமன் குடியிருந்தால் அவருக்கு அடையாளம் தேவையில்லை. ஆனால் இரண்டு, மூன்று சிவராமன்கள் இருந்தால் அவர்களை அடையாளப்படுத்த ‘இவர் மாடிவீட்டு சிவராமன்’ என்றும், ‘இவர் மிலிட்டரி சிவராமன்’ என சொல்லும் அவசியம் உண்டாகிறது. அதே போலவே உலகில் பிற சமயங்கள் உருவான பின்னர் சனாதன தர்மத்தை அடையாளப்படுத்த ஏற்பட்ட பெயரே ஹிந்து’’ என்கிறார் காஞ்சி மஹாபெரியவர். சமயம் என்பதற்கு ‘சமைப்பது’ என பொருள். அதாவது பக்குவப்படுத்துதல். பல பிறவிகளைக் கடந்த மனிதன் தன்னிடம் உள்ள விலங்கு குணங்களை கைவிட்டு பக்குவமாகி அன்புவழியில் வாழ்வதற்கான வழிகாட்டுதலே சனாதன தர்மம். இது வெறும் வழிபாட்டு முறை மட்டுமல்ல. அன்றாடப் பழக்க வழக்கங்களைச் சொல்வதுமாகும். எப்படி குளிப்பது, சாப்பிடுவது, சமூகமாக சேர்ந்து வாழ்வது, அறவழியில் சம்பாதிப்பது என நற்பண்புகளை விளக்குகிறது. இதை உணர்ந்து அடுத்த தலைமுறைக்கும் சொல்ல வேண்டியது கடமை. திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்த போது பாடிய வைர வரிகள் தான் ‘வையகம் துயர் தீர்கவே’. இதில் எல்லா உயிர்களுமே அடங்கும். ‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே’ என்கிறார் தாயுமானவர். ‘குறைவிலாது உயிர்கள் வாழ்க’ என எல்லா உயிர்களையும் வாழ்த்துகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார். ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்னும் வள்ளலாரின் அமுதவரிகள் சனாதன தர்மத்தின் சொத்து. அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திப்பதே சனாதன தர்மத்தின் அடிப்படை. -இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன்