திருச்செந்துார் கோயில் தீர்த்தக் கிணறை பயன்படுத்தலாம் உயர்நீதிமன்றத்தில் தகவல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2023 05:09
மதுரை : திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாஸ்டர் பிளான் பணி முடிந்ததும் முகாரம்ப தீர்த்தக் கிணறு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கோயில் நிர்வாகம் தெரிவித்ததால் வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
திருச்செந்துார் நாராயணன் தாக்கல் செய்த பொதுநல மனு: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் நீராடுவர். பின் முதலாவது தீர்த்தமான முகாரம்ப தீர்த்தக் கிணறு, நாழிக்கிணற்றில் நீராடுவர். பின் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். முகாரம்ப தீர்த்த கிணற்றை கோயில் நிர்வாகம் பராமரிக்கவில்லை. கழிப்பறைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை குழாய்கள் மூலம் தீர்த்த கிணற்றில் கலக்கவிடுகின்றனர். இதனால் கோயிலின் புனிதத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அறநிலையத்துறை கமிஷனர், கோயில் இணைக் கமிஷனருக்கு மனு அனுப்பினேன். கழிவுநீர் கலப்பதை தடுத்து தீர்த்த கிணற்றை புனரமைக்க வேண்டும். பக்தர்கள் நீராட ஏற்பாடு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு நாராயணன் குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது.
கோயில் தரப்பு: தற்போது மாஸ்டர் பிளான் திட்டம் மூலம் கோயிலில் மேம்பாட்டுப் பணி நடக்கிறது. இது சில மாதங்களில் முடிந்துவிடும். அதன்பின் முகாரம்ப தீர்த்தம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.