கோயில் உண்டியலில் ரூ.2 ஆயிரம் நோட்டு; அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை எச்சரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2023 05:09
மதுரை: கோயில் உண்டியல்களில் கிடக்கும் ரூ.2 ஆயிரம் நோட்டை செப்.,30க்குள் வங்கியில் டெபாசிட் செய்யாவிட்டால் அது கோயிலுக்கு ஏற்படும் நிதி இழப்பாக கருதி அதற்கு செயல் அலுவலரே பொறுப்பேற்க வேண்டும் என ஹிந்து சமய அறநிலையத்துறை எச்சரித்துள்ளது. புழக்கத்தில் இருந்த ரூ.2 ஆயிரம் நோட்டை தொடர்ந்து அச்சிடாமல் இருந்த ரிசர்வ் வங்கி, பதுக்கலை தடுக்க அந்நோட்டுகளை திரும்ப பெறுவதாக மே 19 ல் அறிவித்தது. இதன்படி வங்கிகளில் செப்.,30க்குள் ரூ.2 ஆயிரம் நோட்டை ஒப்படைத்து அதன் மதிப்புக்கு ரூ.500, ரூ.200, ரூ.100 நோட்டுகளை பெற்றுச்செல்லலாம் என அறிவித்தது. பெரும்பாலானோர் ரூ.2 ஆயிரம் நோட்டை டெபாசிட் செய்த நிலையில், கோயில் உண்டியல்களில் காணிக்கையாக பக்தர்கள் சிலர் செலுத்தி வருகின்றனர். கடந்த 3 மாதங்களில் உண்டியலில் கிடைத்த ரூ. 2 ஆயிரம் நோட்டை கோயில் நிர்வாகம் வங்கிகளில் டெபாசிட் செய்து வருகிறது. செப்.,30க்கு பிறகு வங்கிகள் ரூ.2 ஆயிரம் நோட்டை பெற்றுக்கொள்ளாது என்பதால் அதற்குள் உண்டியல்களில் கிடைப்பதை உடனடியாக டெபாசிட் செய்ய வேண்டும் என கோயில் செயல் அலுவலர்களுக்கு அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. செப்.,30க்கு பிறகு கைவசம் ரூ.2 ஆயிரம் நோட்டு இருந்தால், அது கோயிலுக்கு ஏற்பட்ட நிதி இழப்பாக கருதப்படும். அந்த நிதி இழப்பிற்கு செயல் அலுவலர்களே பொறுப்பேற்க வேண்டும் என கமிஷனர் முரளீதரன் எச்சரித்துள்ளார்.