அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில் உள்ள பெருமாள் கோவிலில், புரட்டாசி சனியை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், அதிகாலை 4:30 மணிக்கு, அபிஷேக பூஜையும், காலை 5:30 மணிக்கு, அலங்கார பூஜையும் நடந்தது. பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக, உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தார். பொங்கலூர் கரிவரதராஜ பெருமாள் கோவில், ஓரைக்கால் பாளையம் கோதண்டராமர் கோவில், செம்மாணி செட்டிபாளையம் அப்பிச்சிமார் கோவில், பொகலூர் பெருமாள் கோவில், குன்னத்தூர் நாராயணசாமி கோவில் உள்பட அன்னூர் வட்டாரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் அதிகாலை துவங்கி சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.