பாவங்கள் நீங்கி புண்ணியம் தரும்.. ராமேஸ்வரம் கோயில் தீர்த்தம் வறண்டது : பக்தர்கள் ஏமாற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2023 03:09
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தீர்த்த கிணற்றில் நீர் வறண்டு கிடப்பதால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் நீராடி சென்றனர்.
தீர்த்த தலமான ராமேஸ்வரம் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். இதில் நீராட வட, தென் மாநில சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இன்று விடுமுறை தினம் என்பதால் காலை 5:30 மணி முதல் ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் புனித நீராடினர். இந்நிலையில் காலை 11 மணிக்கு 2வது தீர்த்தமான கெந்தமாதன தீர்த்தம், 14வது சூரிய தீர்த்தம், 15வது சந்திர தீர்த்தம், 20வது யமுனா தீர்த்தம், 21வது கங்கா தீர்த்தம் வறண்டு அரை அடி உயரத்தில் தீர்த்தம் தேங்கி கிடந்தது. இதனால் பக்தர்களுக்கு சிலநிமிடங்கள் காத்திருக்க வைத்து மணல் கலந்த தீர்த்தத்தை ஊழியர்கள் வாளியில் இறைத்து மிக குறைவாக தெளித்தனர். இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் நீராடி சென்றனர்.
யானை குளிக்க : ஜூலையில் 7வது தீர்த்தமான சேதுமாதவர் குளத்தில் பல ஆயிரம் லிட்டரை வெளியேற்றி தூர்வாரினார்கள். மேலும் இந்த தீர்த்த குளத்தில் இருந்து கோயில் யானை குளிக்க தினமும் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் எடுத்தனர். இதனால் இதனை சுற்றியுள்ள பிற தீர்த்தங்களும் வறண்டு போகும் என ஹிந்து அமைப்பினர் எச்சரித்தனர். அதன்படியே இன்று கிணற்றில் தீர்த்தங்கள் வறண்டு போனது. கோடை மழை இல்லாமலும், தூர்வாரியதாலும் அக்., இறுதி வரை மேலும் தீர்த்தம் வறண்டு போகும். இதற்கு கோயில் நிர்வாகமே காரணம் என தமிழக வி.எச்.பி., மாவட்ட தலைவர் சரவணன் தெரிவித்தார்.