புரட்டாசி சனி உற்சவம்; திணறியது திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2023 03:09
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி இரண்டாம் சனி உற்சவத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
நேற்று இரவு முதல் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்திருந்தனர். நள்ளிரவு 1:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சன பூஜைகளை கோயில் பட்டர்கள் செய்தனர். பின்னர் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாளை தரிசனம் செய்ய நள்ளிரவு 3:00 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர். பள்ளி காலாண்டு விடுமுறை என்பதால் விருதுநகர் மாவட்ட பக்தர்கள் மற்றுமின்றி மதுரை, தேனி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் பெருமளவில் குவிந்திருந்தனர். மதியம் 2 மணி வரை சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறியதாக போலீசார் தெரிவித்தனர். நள்ளிரவு 3:00 மணி முதல் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, கோவில்பட்டி, அருப்புக்கோட்டை உட்பட பல்வேறு நகரங்களுக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. செண்பகத் தோப்பு காட்டழகர் கோயில், வத்திராயிருப்பு சேது நாராயண பெருமாள் கோயில் மற்றும் தாலுகாவில் உள்ள பல்வேறு பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.