பதிவு செய்த நாள்
03
அக்
2023
10:10
ஓசூர்: ஓசூர், மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், வீடு கட்ட வேண்டும் என்ற கனவு நனவாக வேண்டி, வினோத வேண்டுதலை செய்து செல்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மலை மீது பல நுாற்றாண்டு பழமையான மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் மைசூர் சாமுண்டேஸ்வரி கோவில் போல் அமைந்துள்ளது. முதலாம் ராஜராஜசோழன், குலோத்துங்கசோழன் ஆகியோரை பற்றிய அரிய தகவல்களும் உள்ளன. இக்கோவில் தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பலருக்கு குல தெய்வமாக உள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், வீடு கட்ட வேண்டுமென நினைத்து, வினோத வேண்டுதலை செய்கின்றனர். அதாவது, கோவிலில் உள்ள பூங்காவிற்கு செல்லும் வழியின் இருபுறமும் உள்ள இடம் மற்றும் கோவிலை சுற்றியுள்ள காலி இடத்தில், கற்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து, மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரரை வேண்டி கொண்டால், கூடிய விரைவில் வீடு கட்டும் யோகம் அமையும் என பக்தர்கள் நம்புகின்றனர். இச்செயலை செய்யும் பலர், அதன் மூலம் வீடு யோகம் பெற்றுள்ளனர். ஓசூர் மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள், வீடு கட்ட வேண்டுதல் வைத்து செல்கின்றனர். மேலும், ஒருவர் அடுக்கி வைத்துள்ள கற்களை எடுத்து மற்றொருவர் பயன்படுத்துவதில்லை. அப்பகுதியில் தனித்தனியாக கிடக்கும் கற்களை சேகரித்து வந்து தான், ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்து விட்டு, சுவாமியை வேண்டி கொள்கின்றனர். கோவிலை சுற்றியுள்ள காலி இடங்களை பார்த்தால், ஆயிரக்கணக்கானோர் கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்து சென்றிருப்பதை பார்க்க முடிகிறது. இதுபோன்ற வேண்டுதலை செய்து வீடு கட்டும் அல்லது வாங்கும் யோகம் பெறும் பக்தர்கள் கூறும் காது வழி செய்தியை கேட்டு, கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் இந்த வேண்டுதலை செய்கின்றனர். கோவிலை சுற்றி நிறைய கற்களை அடுக்கி வைத்துள்ளதை பார்க்க முடிகிறது.