பதிவு செய்த நாள்
05
அக்
2023
11:10
கோவை : பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், தமிழக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பூரண உடல் நலம்பெற வேண்டி, பா.ஜ.,வினர் மண் சோறு உண்டனர்.
தமிழக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற நடைபயணம், தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அண்ணாமலைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், நடைபயணம் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், தமிழக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பூரண உடல் நலம் பெற வேண்டி, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, பட்டீஸ்வரர் கோவிலில் உள்ள கோரக்கர் சித்தர் தவம் செய்த இடத்தில், பா.ஜ., தெற்கு மாவட்ட சமூக ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமையில், பா.ஜ.,வினர் அங்கப்பிரதட்சணம் செய்தனர். தொடர்ந்து, தமிழக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை உடல்நலம் பெற வேண்டி மண் சோறு உண்டனர். இதில், பா.ஜ., தெற்கு மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து, ஆலாந்துறை மண்டல் தலைவர் ஜோதிமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.