பதிவு செய்த நாள்
09
அக்
2023
10:10
ஊட்டி: தமிழகத்தில் கோவில் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டு வருகிறது, என, பொன் மாணிக்கவேல் குற்றம் சாட்டினார். நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே, குந்தைசப்பை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகாலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை கிராம மக்கள் நிர்வகித்து வந்தனர். கடந்த, 2020ம் ஆண்டு இந்த கோவிலை, இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தக்கார் நியமனம் செய்யப்பட்டது. கிராம மக்கள் எதிர்ப்பு காரணமாக தக்கார். பதவி ஏற்கவில்லை.
இந்நிலையில், மகாலிங்கேஸ்வரர் கோவிலுக்கு தக்கார் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்தும், இந்து சமய அறநிலைய துறையில் இருந்து கோவிலை விடுவிக்க வேண்டும், என, வலியுறுத்தி, பெண்கள் உட்பட ஏராளமானோர் கோவில் முன் அமர்ந்து பஜனை பாடல் பாடி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், கிராம மக்களுக்கு ஆதரவாக பங்கேற்ற முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கோவில் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கோவில் சொத்துக்கள் அபகரிக்கப்படுவதாக, பிரதமர் மோடி சொன்னது நுாறு சதவீதம் உண்மை. இந்து கோவில்களின் இடங்களை ஆக்கிரமிக்கும் அரசு, மற்ற மதங்களின் இடங்களை ஏன் தொடுவதில்லை. ஆகவே, மகாலிங்கேஸ்வரர் கோவிலுக்கு தக்கார் நியமனம் செய்த உதவி கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, போலீஸ் நிலையத்தில் மனு கொடுக்க உள்ளோம். இதற்கு காரணமான அமைச்சர் மற்றும் உதவி கமிஷனரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அறநிலையத்துறை இந்த கோவிலை கையகப்படுத்தும் முடிவை கைவிட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
வழக்கு தொடரலாம்...! இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் ஹேமலதா கூறுகையில், இந்த கோவில் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு ராஜேஷ் மணிகண்டன் என்பவரை தக்காராக நியமனம் செய்தோம். மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர் நியமனம் செய்ய வேண்டும், என, கோர்ட் உத்தரவிட்டது.அதன்படி, இக்கோவிலுக்கு அறங்காவலர் நியமிப்பது தொடர்பாக கிராம மக்களிடம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. கிராம மக்களின் ஒருவர் நிர்வாகியாக இருக்கலாம். கிராம மக்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் கடிதம் எழுதி கொடுத்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து கோர்ட் வழிமுறைகளை பின்பற்றி கொள்ளலாம், என்றார்.