பதிவு செய்த நாள்
09
அக்
2023
11:10
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில், ராகு பகவானானவர், நாக வல்லி, நாகக்கன்னி ஆகிய, இரு துணைவியருடன், மங்கள ராகுவாக தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். இங்கு ராகு பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. பகல்,
3:40 மணிக்கு, மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு ராகு பகவான் பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி, நேற்று காலை, 10:30 மணிக்கு, நான்காம் கால யாக சாலை பூஜையும், பிற்பகல், 2:30 மணிக்கு கட ம் புறப்பாடும் நடந்தது. பின் பால், மஞ்சள், திரவியப்பொடி, தயிர் உள்ளிட்ட மங்களப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, 3:40 மணிக்கு ராகு பகவான் பெயர்ச்சி அடைந்ததும், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாம் கட்ட லட்சார்ச்சனை நாளை 9ம் தேதிமுதல் 11ம் தேதி வரை நடக்கவுள்ளது.
கீழப்பெரும்பள்ளம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கீழப்பெரும்பள்ளத்தில் சவுந்திரநாயகி உடனாகிய நாகநாதர் கோவில் அமைந்துள்ளது. கேது பகவான் பரிகார ஸ்தலமான இக்கோவிலில் கேது பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. நேற்று மதியம் 3:41
மணிக்கு கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதனை முன்னிட்டு கடந்த 6ம் தேதி தொடங்கி, நான்கு கால பரிகார யாக பூஜைகள் நடைபெற்றன. நான்காம் கால யாக பூஜையில் புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு ஒரு லட்சம் ஆவர்த்திகளுடன் கூடிய மகா யாகம் நடைபெற்றது. தொடர்ந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை வலம் வந்தது. பின்னர், கேது பகவானுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், தயிர் மற்றும் வாசனை திரவியங்கள் உள்ளிட்ட 16 வகை பொருட்களை கொண்டு மகா அபிஷேகம், புனித நீர் கலச அபிஷேகம் நடந்தது. சரியாக 3:41 மணிக்கு வெள்ளி கவச அலங்காரத்தில் கேது பகவான் காட்சியளிக்க மகா தீபாராதனை நடைபெற்றது. திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளத்தில் நடந்த ராகு, கேது பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.