பதிவு செய்த நாள்
09
அக்
2023
05:10
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் நேற்று பிற்பகல் ராகு, கேது பகவான்கள் பெயர்ச்சி நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இருந்து திரளாக பக்தர்கள் கலந்து பரிகார ராசிக்காரர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் ராகு, கேது பகவான்கள் தனி சன்னதிகளில் தம்பதி சகிதமாக எழுந்தருளியுள்ளனர். ராகு , கேது பரிகார தலமான இங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ராகு காலத்தில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் மாநிலம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்தும், பரிகார பூஜைகள் செய்தும் செல்கின்றனர். நேற்று பிற்பகல் 3.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியிலிருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆனார்கள். ராகு பகவான் நீலப்பட்டிலும், சிம்ஹை தேவி மஞ்சள் பட்டிலும், கேது பகவான் பழவகை பட்டிலும், சித்ரலேகா தேவி நீலப்பட்டிலும் மலர் அலங்காரத்தில் எழுந்தருளினர். பெயர்ச்சி நிறைவுபெற்றதை தொடர்ந்து பகல் 1.15 மணிக்கு அனுக்ஞை பூர்வாங்க பூஜை, நவக்கிரக ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து 3.40 மணிக்கு பெயர்ச்சி நடந்ததை ஒட்டி ராகு , கேது பகவான்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு ராகு பகவானுக்கும் சிம்ஹை தேவிக்கும், கேது பகவானுக்கும் சித்ரலேகா தேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசியினரும் பரிகார பூஜைகள் நடத்தி ராகு, கேது பகவான் அருள் வேண்டினர். ராகு கேது பகவான்கள் தம்பதி சகிதமாக எழுந்தருளியிருப்பது இந்த கோயிலில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. திருக்கல்யாணத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான உபயதாரராக கம்பம் கே.ஆர். ஜெயப்பாண்டியன், கலைவாணி குடும்பத்தினர் இருந்து செய்தனர். அபிஷேக ஆராதனைகள், திருக்கல்யாண நிகழ்ச்சிகளை கோயில் அர்ச்சகர் மணிவாசகம், உதவியாளர் முத்து செய்தனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் இளஞ்செழியன் செய்திருந்தார்.