பதிவு செய்த நாள்
10
அக்
2023
10:10
குற்றாலம்: குற்றாலம், குற்றாலநாத சுவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றம் நடந்தது. குற்றாலம், குற்றாலநாதர் -குழல்வாய்மொழி அம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி விசு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பிச்சுமணி பட்டர் தலைமையில் ஜெயமணிசுந்தரம் பட்டர், மகேஷ் பட்டர் சிறப்பு பூஜை செய்தனர். கொடியேற்ற விழாவில் முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் வீரபாண்டியன், இலஞ்சி அன்னையாபாண்டியன், சொக்கம்பட்டி பெரிய அனஞ்சிதேவர், சின்ன அனஞ்சிதேவர், ராஜாமறவன், முருகேசன், மாரியப்பன், வெள்ளத்துரை, சுப்பையாபாண்டியன், துரைப்பாண்டியன், சுந்தர்ராஜன், காசிப்பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருவிழாவிற்காக இலஞ்சியில் இருந்து திருவிலஞ்சி குமரனை அழைத்து வரும் வைபவம் நடந்தது. விழாவில் தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை, இரவு வீதியுலா நடக்கிறது. வரும் 12ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 13ம்தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. 15ம் தேதி காலை 9.30 மணி, இரவு 7 மணிக்கு நடராச மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை, 16ம்தேதி காலை 10.30 மணிக்கு மேல் சித்திரசபையில் நடராச மூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 18ம்தேதி விசு தீர்த்தவாரி நடக்கிறது. தொடர்ந்து திருவிலஞ்சி குமரனுக்கு பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.