குலசேகரப்பட்டணம் முத்தாரம்மன் தசரா விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2023 09:10
உடன்குடி: குலசேகரபட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் தசரா விழா கொடியேற்றம் இன்று காலை ஆரம்பமானது.
குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 24ம் தேதி மகிஷாசூரசம்ஹாரம் நடக்கிறது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு நேற்று 14ம் தேதி காலை11 மணிக்கு காளி பூஜை, மதியம் 12 மணிக்கு அன்னதானம், இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது. இன்று 15ம் தேதி காலை 5 மணிக்கு கொடிபட்டம் திருவீதி உலா, 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 9 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.
விழா நாட்களில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. 10ம் திருநாளான 24ம் தேதி இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன் எழுந்தருளி மகிஷாசூரசம்ஹாரம் செய்தல் நடக்கிறது. 25ம் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு சூரசம்காரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேக ஆராதனை 2 மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு எழுந்தருளி சாந்தாபிஷேக ஆராதனை, 3 மணிக்கு அம்மன் திருத்தேரில் பவனி வந்து தேர் நிலையம் வருதல், காலை 5 மணிக்கு அபிஷேக, ஆராதனை, 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா புறப்பட்டு மாலை 4 மணிக்கு கோயில் வந்து சேர்ந்தவுடன் 4.30 மணிக்கு காப்பு களைதல் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. விரதம் இருந்து காப்பு கட்டி வேடம் அணிந்த பக்தர்கள்மகிஷாசூர சம்ஹாரம் முடிந்த பின் அம்மனுக்கு காப்பு அவிழ்க்கும் வரை காத்திருக்காமல் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லலாம். அம்மனுக்கு காப்பு அவிழ்க்கும் நேரத்தை தெரிந்து கொண்டு அவரவர் சொந்த ஊர்களில் உள்ள கோயில்களில் காப்பு அவிழ்த்துக் கொள்ளலாம். நெரிசலை தவிர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.