பதிவு செய்த நாள்
15
அக்
2023
10:10
மைசூரு; உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா 413வது விழாவை, பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஹம்சலேகா, சாமுண்டி மலையில் இன்று துவக்கி வைத்தார். விழாவை ஒட்டி, மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
கலாசார நகரமான மைசூரு, மணப்பெண்போல மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது என்றால் உலக பிரசித்தி பெற்ற தசரா விழா வந்துவிட்டது என்று அர்த்தம். மன்னர் காலத்தில் 1610ல் இருந்து இவ்விழா கொண்டாடப்படுகிறது. ஆரம்ப நாட்களில் தங்க அம்பாரியில் மன்னரை அமரவைத்து, விஜயதசமி அன்று நடக்கும் ஜம்புசவாரி ஊர்வலத்தில் அழைத்துவரப்படுவார். மக்களாட்சி அமைந்த பின், சாமுண்டீஸ்வரி தேவி அமரவைத்து ஊர்வலமாக அழைத்து வரப்படுகிறார். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பிரமுகரால் தசரா விழா துவக்கிவைக்கப்படும். கடந்தாண்டு, ஜனாதிபதி திரவுபதி முர்மு துவக்கிவைத்தார். இந்தாண்டு தசரா கொண்டாட்டம், இன்று துவங்கி,. 24ம் தேதி நிறைவு பெறுகிறது. இதற்காக சாமுண்டி மலையில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஹம்சலேகா: இன்று காலை சுப விருச்சிக லக்னத்தில் பிரபல இசையமைப்பாளர் ஹம்சலேகா, சாமுண்டீஸ்வரி தேவிக்கு மலர் துாவி, 413வது தசரா விழாவை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். விழாவில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், உடையார் மன்னர் வம்சத்தின் யதுவீர் மற்றும் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்குபெறுகின்றனர். இவர்கள் நேற்றே மைசூரு வந்தடைந்தனர். மாலையில், அரண்மனை வளாகத்தில் இசை வித்வான் விருது வழங்கப்படுகிறது. இரவில் கலாசார நிகழ்ச்சிகளை முதல்வர் துவக்கிவைக்கிறார். 22ம் தேதி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று நடக்கும் துவக்க விழா முதல், நிறைவு விழா வரை தினமும் நடக்கின்ற தசரா நிகழ்ச்சிகளை நேரலையில் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி,
facebook.mysoredasara.gov.in என்ற முகநுாலிலும்;
youtube.mysoredasara.gov.in என்ற யூடியூபிலும்;
mysoredasara.gov.inஎன்ற இணையதளத்திலும் பார்க்கலாம்.