ஐப்பசி துலா உற்சவம்; மயிலாடுதுறை காவிரி துலா கட்டம் தூய்மைப் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2023 04:10
மயிலாடுதுறை; மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் துலாம் மாதமான ஐப்பசி மாதம் முழுவதும் துலா உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த உற்சவத்தை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் இருந்து பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் காவிரி கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். நாளை மறுதினம் ஐப்பசி மாதம் பிறப்பதால் துலா கட்ட காவிரி ஆற்றங்கரை, பக்தர்கள் நீராடுவதற்கு வசதியாக படித்துறைகள் தூய்மை செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதனை ஏற்று மயிலாடுதுறை நகராட்சி சார்பில் தூய்மை செய்யும் பணியை நகராட்சி சேர்மன் செல்வராஜ் துவக்கி வைத்தார். துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் ஜேசிபி எந்திரங்கள் மூலம் துலா கட்ட காவேரி பகுதி சமன்படுத்தப்பட்டு அங்கிருந்த குப்பைகள், செடிகள் அகற்றப்பட்டு தூய்மைப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளில் நூற்றுக்கணக்கான நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த உற்சவத்தில் தமிழக மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் மயிலாடுதுறை நீராட வருவார்கள். அதற்காக கர்நாடகா தண்ணீர் கொடுக்காததால் காவிரியில் தண்ணீர் இல்லை என்னும் குறையை போக்கிட 2017ல் நடைபெற்ற மகாபுஷ்கர விழாவின்போது அமைக்கப்பட்ட புஷ்கர தொட்டியில் புனித நீராட போர்வெல் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டது. மீண்டும் அதனை நகராட்சி சார்பில் சீரமைத்து புதிதாக குழாய்கள் பொருத்தப்பட்டு தண்ணீர் கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட உள்ளது. இத்தூய்மை பணியின் போது நகராட்சி கவுன்சிலர்கள் உடனிருந்தனர். பக்தர்களுக்கு உதவிய நகராட்சி சேர்மன் செல்வராஜ், நகராட்சி கமிஷனர் சங்கர் ஆகியோருக்கு மயிலாடுதுறை துலா கட்ட காவிரி வழிபாட்டு குழுவின் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகரபாண்டியன், செயலாளர் முத்துக்குமாரசாமி ஆகியோர் நன்றி தெரிவித்துகொண்டார்கள்.