சபரிமலை; ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை நடை நாளை மாலை திறக்கிறது. நாளை மறுநாள் காலை புதிய மேல் சாந்தி தேர்வு நடைபெறும்.
நாளை மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். அதை தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வேறு விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனம், அபிஷேகத்துக்கு பின்னர் நெய்யபிஷேகத்தை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு தொடங்கி வைப்பார். அதைத் தொடர்ந்து கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும். காலை 7:30 மணிக்கு உஷ பூஜை நிறைவு பெற்றதும் கார்த்திகை ஒன்றாம் தேதி முதலான ஒரு ஆண்டு காலத்துக்கான புதிய மேல் சாந்தி தேர்வு நடைபெறும். திருவிதாங்கூர் தேவசம்போர்டு நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார். இதே முறையில் மாளிகைப்புறம் மேல் சாந்தியும் தேர்வு செய்யப்படுவார். வரும் 22ஆம் தேதி வரை ஐப்பசி மாத பூஜைகள் நடைபெறும். எல்லா நாட்களிலும் வழக்கமான உஷ பூஜை, உச்ச பூஜை, களபாபிஷேகம், தீபாராதனை, அத்தாழபூஜை இவற்றுடன் தினமும் இரவு 7:00 மணிக்கு படி பூஜை நடைபெறும். எல்லா நாட்களிலும் உதயாஸ்தமன பூஜை உண்டு .22 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.