பதிவு செய்த நாள்
16
அக்
2023
05:10
பரமக்குடி; பரமக்குடியில் உள்ள பல்வேறு கோயில்கள் மற்றும் வீடுகளில் கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி வழிபாடு நடத்தி வருகின்றனர்.
மலைமகள், அலைமகள், கலைமகள் இணைந்து ஒரே ஸ்வரூபமாக மகிஷாசுரனை வதம் செய்து மக்களை துன்பத்திலிருந்து காத்த விழாவாக நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது அப்போது 3 படிகள், 5, 7, 9 மற்றும் 11 என படிப்படியாக மனிதனின் வாழ்க்கை உயர்வு மற்றும் உலகில் உள்ள உயிரினங்கள் எப்படி தோன்றியது என்பது குறித்து விளக்கம் வகையில் பொம்மைகள் வரிசைப் படுத்தப்படும். இப்படி ஓரறிவு உயிரினங்கள், ஈரறிவு, மூவறிவு, நான்கறிவு ஐந்தறிவு என செடி, கொடிகள், நத்தை, சங்கு, எறும்பு, கரையான், நண்டு, வண்டு, பறவை, விலங்கினங்கள் அடங்கும். ஆறாம் படியில் ஆறறிவு படைத்த மனிதன், பழக்கவழக்கங்கள், திருமண சடங்குகள், 7 ம் படியில் மகான்களின் பொம்மைகள், 8 ம் படியில் பகவானின் அவதாரங்கள், 9 ம் படியில் பூரண கலசம் மற்றும் முப்பெரும் தேவிகளின் சிலைகளை வைத்து வழிபடுவர். தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தி பெண்கள் ஆடி, பாடி மகிழ்ந்து கோலாகலமாக விழா கொண்டாடப்படுகிறது. அக்., 15 ல் தொடங்கிய விழா, 23 சரஸ்வதி, ஆயுத பூஜையும், 24 அன்று விஜயதசமி நாளில் அனைத்து கோயில்களிலும் சூரனை வதம் செய்யும் நிகழ்வுடன் விழா நிறைவடையும்.