பதிவு செய்த நாள்
20
அக்
2023
01:10
மயிலாடுதுறை; ஆன்மீகம், சமுதாயம் மற்றும் கல்வித்துறையில் மிகப்பெரிய சாதனை படைத்தவர் பங்காரு அடிகளார்; பக்தி, பிரச்சாரங்களின் மூலமாகவும் சாதிக்க முடியாததை 20 ஆண்டுகாலத்தில் தமிழகத்தில் நாத்திகத்தை மடை மாற்றி ஆன்மீக வழியில் இட்டுச்சென்றவர் பங்காரு அடிகளார் என தருமபுரம் ஆதீனகர்த்தர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேல்மருவத்தூர் தவத்திரு பங்காரு அடிகளார் மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இரங்கல் தெரிவித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியது: மேல்மருவத்தூர் திருத்தலம் பங்காரு அடிகளார் காலத்தில் உலகளவில் பெரிய சாதனைகளை செய்துள்ளது. பட்டிதொட்டியெங்கும், கிராமங்கள்தோறும் பக்தியை உருவாக்கி, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர் ஸ்தாபித்த திருக்கோயிலில் அனைவரும் சென்று வழிபாடு செய்யும் முறையை ஏற்படுத்தியுள்ளார். இது சமயம் பரப்புவதற்கு மிகப்பெரிய சாதனமாக இருந்தது. நமது பக்தியின் மூலமாகவும், பிரச்சாரங்களின் மூலமாகவும் நாம் சாதிக்க முடியாததை அவர் 20 ஆண்டு காலத்தில் அவர் தமிழகத்தில் நாத்திகத்தை மடை மாற்றி ஆன்மீக வழியில் இட்டுச் சென்றவர். பல தலைவர்களை அவரது கோயில்களுக்கு அழைத்துச் சென்றவர். கீழ்நிலையில் உள்ள தனது தொண்டர்களை ஒவ்வொரு நிலையில் பணிகளைக் கொடுத்து அவர்களை ஆற்றுப்படுத்தியுள்ளார். கல்விப்பணியிலும் மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலைக்கல்லூரி, பள்ளிகளை நிறுவியுள்ளார். மேல்மருவத்தூரில் ரயில் நின்று செல்லும் வகையில், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாளில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் அங்கு சென்று தொண்டாற்றி வருகின்றனர். ஆன்மீகத் துறையில், சமுதாயத் துறையில், கல்வித்துறையில் மிகப்பெரிய சாதனை படைத்தவர் பங்காரு அடிகளார். அவர் தனது 60 மற்றும் 70-வது வயதுகளில் 26-வது குருமகா சந்நிதானம் அருளாட்சி காலத்தில் தருமபுரம் ஆதீனக் கோயிலான திருக்கடையூர் கோயிலுக்கு வந்து 60-ஆம் திருமணம், 70-ஆம் திருமணம் ஆகியவற்றை செய்துகொண்டு சென்றுள்ளார். மேலும், 26-வது குருமகா சந்நிதானத்தை மேல்மருவத்தூரில் நடைபெற்ற பௌர்ணமி பூஜைக்கு அழைத்து 108 குண்டங்கள் அமைத்து பூஜை நடத்தியுள்ளார். அவரது மகன் அன்பழகன் அண்மையில் தருமபுரம் ஆதீனத்துக்கு வந்து சென்றார். மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்திய அவரது மறைவு ஆன்மீக வளர்ச்சிப்பாதையில் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.