பதிவு செய்த நாள்
20
அக்
2023
05:10
கன்னிவாடி; கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில் குருபூஜை விழாவில், ஏராளமான வெளிமாநில சாதுக்கள் பங்கேற்றனர்.
கன்னிவாடி அருகே கசவனம்பட்டியில் பிரசித்திபெற்ற மவுனகுரு சுவாமி கோயில் உள்ளது. சுவாமியின் மகாசமாதி தினமான ஐப்பசி மூலம் நட்சத்திரத்தில், ஆண்டுதோறும் குருபூஜை நடக்கிறது. இந்தாண்டிற்கான விழா, அக். 19ல் தீர்த்தாபிஷேகத்துடன் துவங்கியது. முன்னதாக காப்புகட்டி விரதம் இருந்த பக்தர்கள், சிவனூரணி, திருமலைக்கேணி, திருமூர்த்தி, சுருளி, காசி, சதுரகிரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து புனித நீர் எடுத்து வந்தனர். தீர்த்த, பால் கலசங்கள் ஊர் விளையாடல் நடந்தது. இன்று மகா யாகம் நடத்தப்பட்டு, 1,008 படி பாலாபிஷேகத்துடன் குருபூஜை நடந்தது. அன்னதான கொடியேற்றத்துடன், சாதுக்களுக்கு வஸ்திர, சொர்ண தானம், அன்னதானம் நடந்தது. மும்பை, காசி, பத்ரிநாத் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான சாதுக்கள் பங்கேற்றனர். மவுனகுரு சுவாமிகள் டிரஸ்ட் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.