பதிவு செய்த நாள்
24
அக்
2023
09:10
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே புத்தூர் மலைப்பகுதியில் 3000 ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் தொல்பொருள் ஆய்வாளர் காந்தி ராஜன் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
உசிலம்பட்டி பகுதியில் மனித நாகரீகம் தொடர்ந்து 3000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருவதற்கான தடயங்கள் தடயங்கள் பல்வேறு இடங்களில் கிடைத்து வருகிறது. புத்தூர் மலைக்கு மேற்கே உள்ள பகுதியில் சமணர்கள் வாழ்விடங்களும் புடைப்புச் சிற்பங்களும் குகையில் காணப்படுகிறது. அதே குகையில் பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அருகிலேயே வகுரணி மூன்று மலை புலிப்பொடவு பகுதியில் சிவப்பு வெள்ளை நிற கோட்டோவியங்கள் சமீபத்தில் கண்டறியப்பட்டது. அருகிலேயே மலைப்பட்டியில் முதுமக்கள் தாழி இரும்பு கருவிகளுடன் கிடைத்துள்ளது. பாறைப்பட்டியில் கல்திட்டு, பாறைகளில் கப்மார்க், உலைப் பட்டியில் ரோமானிய வணிகம் சார்ந்த பொருட்கள், இரும்பு தொழிற்சாலை தடயங்கள் , திடியன், கல்லூத்து மலைகளில் சமணர் வாழ்ந்த தடயங்கள், கொங்கபட்டியில் சுமார் 2100 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழி கல்வெட்டு கொண்ட தொம்பரை கல், 1000 ஆண்டுகள் பழமையான ஆனையூர் ஐராவதேஷ்வரர் கோயில், மேலத்திருமாணிக்கம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் என மனித நாகரீகம் தொடர்ந்து வாழ்ந்து வந்த தடயங்கள் கிடைத்துள்ளன. முற்காலத்தில் இருந்து கேரள மாநிலம் செல்லும் முக்கிய வணிகப் பாதையாகவும் இருந்துள்ளது. தற்போது புத்தூர் மலையின் வடக்கு பகுதியில் எ.ராமநாதபுரம் கிராமத்திற்கு அருகில் சுமார் 250 அடி உயரத்தில் நரிப்பள்ளி பொடவு என கிராம மக்களால் அழைக்கப்படும் பகுதியில் உள்ள பாறைகளின் உட்பகுதியில் பாறை ஓவியங்களை தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன், பாலு ஆகியோர் கண்டறிந்துள்ளனர்.
காந்திராஜன்: இங்குள்ள பாறையில் வெள்ளைநிற கோட்டோவியங்கள் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக இருக்கலாம். வேட்டை சமூகம், வேளாண் சமூகம் என வெவ்வேறு காலகட்ட ஓவியங்கள் காணப்படுகின்றன. வில்லேந்திய மனிதன், குதிரை வீரன், குதிரை வீரனுடன் போர்புரியும் வீரன், நீர்நிலைகள், பாதைகள் குறித்து குறியீடு என காணப்படுகிறது. இவற்றில் முக்கியமாக ஆண், பெண் சேர்க்கை தொடர்பான ஓவியம் உள்ளது. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை, திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை ஆகிய இரண்டு இடங்களில் தான் இதுபோன்ற பாலியல் தொடர்பான ஓவியம் காணப்படுகிறது. இந்த பகுதியில் காணப்படுவது அரிதான ஒன்றாகும். மதுரையின் தொன்மையான வரலாற்று பின்னணியில் 3000 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக மக்கள் வாழ்விடங்களுக்கான தடயங்கள் உசிலம்பட்டி பகுதியில் கிடைத்து வருகிறது. இந்த பகுதியில் மேலும் விரிவான ஆய்வுகள் மேற்கொண்டால் மேலும் தகவல் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.