பதிவு செய்த நாள்
26
அக்
2023
10:10
தஞ்சாவூர்: உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின், 1038வது சதய விழா, நேற்று முன்தினம் மற்றும் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, கோவில் உள் பிரகாரம், வெளிப்புறம், நுழைவு வாயில், கோவில் வெளியே உள்ள சோழன் சிலை என அனைத்து இடங்களிலும், சீரியல் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.
மின் விளக்கு அலங்காரத்திற்காக, கேரளாந்தகன் நுழைவாயில் உள்ளிட்ட பல இடங்களில் சுவர்களிலும், சுதைகளிலும் ஆணி அடிக்கப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. தினமலர் நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில், மத்திய தொல்லியல் துறையினர் விசாரணை நடத்துகின்றனர். இது குறித்து, மத்திய தொல்லியல் துறை உதவி பராமரிப்பு அலுவலர் சீத்தாராமன் கூறியதாவது: சதய விழாவுக்காக கோவில்களில் மின்விளக்கு பொருத்தப்பட்ட போது, சுவர்களில் ஆணி அடித்தது குறித்து விசாரணை நடக்கிறது. இது தொடர்பாக, கோவில் நிர்வாகத்தின் தரப்பில் தெரியப்படுத்தி உள்ளோம். வருங்காலத்தில் இது போல, ஆணி அடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். பாரம்பரியம் மிக்க அந்த வளாகத்தில் உள்ள சுவர்களில் ஆணி அடிப்பதை சீரமைப்பதில், ஊழியர்கள் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர். இனிமேலும், சுவர்களில் ஆணி அடித்ததால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சேதப்படுத்தினால் தண்டனை என்ன?; மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பரிய சின்னங்களை சேதப்படுத்தினால் கடும் தண்டனை வழங்கப்படும். தொல்லியல் நினைவு சின்னங்கள் பாதுகாப்பு சட்டம் - 2010ன் படி, 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை அல்லது 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சேதத்தின் தன்மையை பொறுத்து, லட்ச ரூபாயும், இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் சேர்த்து விதிக்கப்படும். மேலும், கல்வெட்டு, ஓவியங்களில் சேதம் செய்பவர்கள் மீது, போலீசில் புகார் செய்து, கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கலாம்.