கள்ளழகர் கோயிலில் தொட்டித் திருமஞ்சனம்; எண்ணெய் தேய்த்து நீராடிய பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26அக் 2023 11:10
மதுரை; கள்ளழகர் கோயிலில் தலையருவி உற்சவம் (தொட்டித் திருமஞ்சனம்) நடைபெற்றது. நுாபுர கங்கை அருவியின் கீழ் உடுத்திய உடைகளுடனும், அணிந்த ஆபரணங்களுடனும் நின்றே எண்ணெய் தேய்த்து நீராடினார் பெருமாள்.
மதுரையில் சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை காண கோடிக்கணக்கான பக்தர்கள் வருவர். இது போல ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசியின் போது நடைபெறும் மற்றொரு வைபவம் தொட்டித் திருமஞ்சனம். அன்றைய தினம் எண்ணெய் காப்பிட்ட நிலையில் மலைக்கு மேலுள்ள சுனையில் எழுந்தருள்கிறார் பெருமாள். அப்போது பெருமாளின் திருமேனியின் மீது அருவிநீர் வழிந்தபடி இருக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கும். இந்தக் காட்சியைக் காண வரும் பக்தர்கள் மீது சுனையின் நீரைத் தெளிப்பார்கள். இந்தத் தொட்டித் திருமஞ்சனம் குறித்து ஒரு கதை உண்டு. பெருமாளுக்கு கைங்கர்யம் செய்து வந்த திருமலையாண்டான் எனும் பக்தர் ஒரு நாள் இறந்து போனார். அவரின் மகன் கந்தரதோளுடையான் திதி செய்ய முற்பட்டபோது திதி காரியங்களைச் செய்து கொடுக்க அந்தணர் எவரும் கிடைக்கவில்லையாம். இந்நிலையில், பெருமாளே அந்தணராக வந்து திதி செய்து உணவருந்திச் சென்றாராம். இதவான் திருமலையாண்டான் நினைவாக ஆண்டு தோறும் ஐப்பசி வளர்பிறை துவாதசி நாளில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு சுனையில் வந்து பெருமாள் நீராடுவதாக ஐதிகம். இத்தகைய சிறப்பு மிக்க இவ்விழா இன்று நடைபெற்றது. விழாவில் கள்ளழகர் தேவியர் இன்றி தனித்துச்சென்று நுாபுர கங்கை அருவியின் கீழ் உடுத்திய உடைகளுடனும், அணிந்த ஆபரணங்களுடனும் நின்றே எண்ணெய் தேய்த்து நீராடினார். உற்சவர் நீராடிய தண்ணீர் பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.