பதிவு செய்த நாள்
26
அக்
2023
12:10
எழுமலை, எழுமலையைச் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இணைந்து கொண்டாடும் முத்தாலம்மன் கோயில் திருவிழா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. எழுமலையில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் முத்தாலம்மன் கோயிலில் இருந்து அம்மன் சப்பர தேர் நான்கு ரத வீதிகளின் வழியாக ஊர்வலமாக சிலையெடுப்பிற்காக எடுத்துச் சென்றனர். மேற்குத் தெருவில் செய்யப்பட்ட 10 முத்தாலம்மன் சிலைகள், இ.பெருமாள்பட்டி, நல்லதாதுநாயக்கன்பட்டி, சங்ககவுண்டன்பட்டி, தச்சப்பட்டி, உத்தப்புரம், உத்தப்புரம் மேற்குத் தெரு, காமாட்சிபுரத்திற்கு இரண்டு சிலைகள், ஆத்தங்கரைப்பட்டி, எழுமலை ஆகிய கிராமங்களுக்கு பொதுமக்கள் எடுத்துச் சென்றனர். இ.கோட்டைப்பட்டியில் செய்யப்பட்ட முத்தாலம்மன் சிலைகளை அம்மாபட்டி, இ.கோட்டைப்பட்டி, வடக்கத்தியான்பட்டி எடுத்துச் சென்றனர். நல்லமநாயக்கன்பட்டி நாகமநாயக்கன்பட்டி, சீல்நாயகன்பட்டி பேரையம்பட்டி ஆகிய ஊர்களுக்கு அந்தந்த பகுதிகளில் செய்யப்பட்டு அந்தந்த கிராமங்களில் வைத்து இரவு முழுவதும் சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று மதியம் 3:00 மணியளவில் சிலைகளை எடுத்து கிராமங்களில் உள்ள கண்மாய் பகுதியில் வைத்தனர். உத்தப்புரத்திற்கான சிலையெடுப்பு மட்டும் 144 தடையுத்தரவு இருந்ததால், மற்ற கிராமங்களில் திருவிழா முடிந்தவுடன் போலீசார் பாதுகாப்புடன் எடுத்துச்சென்றனர்.
எதிர்சேவை: இதில் எழுமலை முத்தாலம்மன் கோயிலில் இருந்து சப்பரம் எழுமலை - ஆத்தங்கரைப்பட்டி செல்லும் வழியில் உள்ள கண்மாய் கழுங்கு அருகில் கொண்டு வந்தனர். எழுமலை மற்றும் ஆத்தரங்கரைப்பட்டி முத்தாலம்மன் சிலைகளுடன் பொதுமக்கள் எதிர் சேவை நிகழ்ச்சி நடத்தினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். டி.ஐ.ஜி. ரம்யாபாரதி, எஸ்.பி., சிவபிரசாத் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோயில் நிர்வாகக்குழுவினர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.