சீர்காழி கோவில் சிலைகளை அரசு கையகப்படுத்தினால் போராட வேண்டும்; பொன் மாணிக்கவேல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2023 11:10
மயிலாடுதுறை; சீர்காழி சட்டைநாதர் கோயில் சிலைகளை அரசு கையகப்படுத்த முயன்றால், மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான புகழ் பெற்ற சட்டைநாதர் கோயிலில், கும்பாபிஷேக விழாவுக்கான யாக சாலை அமைப்பதற்காக கடந்த ஏப்.16-ம் தேதி பள்ளம் தோண்டியபோது, 23 உலோகச் சிலைகள், 410 முழுமையான தேவார செப்பேடுகள், 83 சேதமடைந்த செப்பேடுகள், பூஜைப் பொருட்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. அவை தற்போது கோயில் வளாகத்திலேயே பாதுகாப்பு அறையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இநிலையில் நேற்று இக்கோயிலில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் தரிசனம் செய்து, சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சீர்காழி சட்டைநாதர் கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தெய்வத் திருமேனிகளை இக்கோயிலில்தான் வைக்க வேண்டும். இதனை அரசு கையகப்படுத்தக் கூடாது. பூமிக்கு அடியில் பொருட்கள் அல்லது பொக்கிஷங்கள் கிடைத்தால் தான் அரசு கையகப்படுத்த வேண்டும். தெய்வத் திருமேனிகளை அரசு கையகப்படுத்தக் கூடாது. கையகப்படுத்த நினைத்தால் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையுடன் அரசை எதிர்த்து போராட வேண்டும். தமிழகத்தில் 1975-ம் ஆண்டுக்குப் பின்னர் 38 ஆயிரம் கோயில்களை அரசுகள் எடுத்துக் கொண்டுவிட்டன. ஆட்சியாளர்கள் இந்து கோயில்களுக்குள் வருவதில்லை. ஆனால் கோயில்களை ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைப்பது தவறு. சீர்காழி அருகே உள்ள திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வர் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட சிலைகளை கலைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை மீட்க இந்துக்கள் முன்வர வேண்டும். இது தொடர்பாக நான் வழக்கு தொடர உள்ளேன் என்றார்.