நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30அக் 2023 10:10
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
‘திருநெல்வேலி’ எனப் பெயர் வரக்காரணமாக அமைந்த காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். திருக்கல்யாண திருவிழாவுக்காக பந்தல்கால் நடும் வைபவம் கடந்த 13ம் தேதி அம்பாள் சன்னதி நுழைவுவாயிலில் நடந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் சந்திரகிரஹணமாக இருந்ததால் சந்திரசேகர், பவானி அம்பாளுக்கு உட்தெப்பத்தில் தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து கோயில் சுத்தம் செய்யப்பட்டது. கொடியேற்றமான நேற்று அம்பாள் சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. விழா காலங்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் காந்திமதி அம்பாள் பல்வேறு வாகனங்களில் ரதவீதிகளில் வீதியுலா நடக்கிறது. 9ம் திருவிழாவான நவ.7ம் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு காந்திமதி அம்பாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளல் நடக்கிறது. அப்போது காட்சி மண்டபத்திற்கு சென்று அம்பாள் தவம் செய்கிறார். நவ.8ம் தேதி மதியம் 12 மணிக்கு காட்சி மண்டபத்தில் காட்சித்திருநாள் நடக்கிறது. காந்திமதி அம்பாளுக்கு, சுவாமி காட்சியளித்தலும், தொடர்ந்து ரதவீதிகளில் சுவாமி, அம்பாள் வீதியுலாவும் நடக்கிறது. 9ம் தேதி அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் அம்பாள் சன்னதி ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. தொடர்ந்து 3 நாட்கள் அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. அதையடுத்து 12ம் தேதி இரவு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டணப்பிரவேசம் நடக்கிறது.