பதிவு செய்த நாள்
31
அக்
2023
12:10
துாத்துக்குடி: தூத்துக்குடி சிவன் கோவில், ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற, பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு திருவிழா,நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அதிகாலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம் உட்பட சிறப்பு பூஜைகள் தலைமை அர்ச்சகர் செல்வம்பட்டர் தலைமையில் நடந்தது. பின்னர் சரியாக 10.20 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. கொடிக்கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, வைகுண்டபதி பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், நிர்வாக அதிகாரி தமிழ்செல்வி, தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர், அறங்காவலர்கள் பி.எஸ்.கே.ஆறுமுகம், சாந்தி, ஜெயலட்சுமி, மந்திரமூர்த்தி, பாலசங்கர், ஜெயபால், முருகேஸ்வரி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கோட்ராஜா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் பாகம்பிரியாள் அம்மன் பித்தளை சப்பரம், கிளி வாகனம், அன்னபட்சி வாகனம், சிம்மவாகனம், வெள்ளி மயில் வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், கமல வாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வருதல் நடக்கிறது. வரும் 7ம் தேதி காலை 10:40 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. அலங்கரிக்கப்பட்ட தேரில் பாகம்பிரியாள் அம்மன் ரதவீதி உலா வருதல் நடக்கிறது. வரும் 8ம் தேதி இரவு 7:00 மணிக்கு பாகம்பிரியாள் அம்மன் சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் பூப்பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், 9ம் தேதி இரவு 8:30 மணிக்கு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா நாட்களில் கலை நிகழ்ச்சிகள், நாட்டிய நிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, நிர்வாக அதிகாரி தமிழ்செல்வி, தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.