பதிவு செய்த நாள்
31
அக்
2023
12:10
சென்னை: நீதிமன்றத்தில் முறையாக சட்டத்தை நிலைநாட்டி, சென்னையில் கலாசார மையத்தை கண்டிப்பாக அமைப்போம், என, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டு, அறநிலையத்துறைக்கு ஒதுக்கப்பட்ட, 25 பெண்கள் உள்ளிட்ட, 31 சுருக்கெழுத்து தட்டச்சர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை, அமைச்சர் சேகர்பாபு நேற்று வழங்கினார். பின், அவர் அளித்த பேட்டி:சென்னையில் உள்ள, 1,223 கோவில்களின் பராமரிப்பு, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மற்றும் திருப்பணிகள் குறித்து சீராய்வு மேற்கொள்ள உள்ளோம். மேலும், 100 கோவில்களை கணக்கில் எடுத்து திருப்பணி நடத்தி, அடுத்தாண்டு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளோம். விளம்பரத்திற்காக எந்த பணத்தையும், நாங்கள் செலவு செய்வதில்லை. உபயதாரர்கள் நிதியிலிருந்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கலாசார மையம் என்பது ஹிந்து சமய நெறிகள், கோட்பாடுகளை பரப்புவது, ஆன்மிகத்தை வளர்ப்பதற்கான ஒரு தளம்; அது பொழுதுபோக்கு மையம் இல்லை. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியில், அதை அமைப்பதில் சட்ட விதிமீறல்கள் இல்லை. முறையாக துறை அனுமதியோடு, அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றி, இணை கமிஷனர் வாயிலாக கமிஷனருக்கு அனுப்பப்பட்ட அறிக்கையின் படி, கலாசார மையம் அமைக்கப்படும்.எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்திற்கு செல்பவர்கள், இதற்கும் செல்லக்கூடும். நீதிமன்றத்தில் முறையாக சட்டத்தை நிலைநாட்டி, கலாசார மையத்தை கண்டிப்பாக அமைப்போம். இவ்வாறு சேகர்பாபு கூறினார்.