மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் மற்றும் வதான்யேஸ்வரர் கோயில்களில் கொடியேற்றப்பட்டு உற்சவம் தொடங்கியது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஐப்பசி கடைசி 10 நாள் உற்சவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இன்று, திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவ கொடியேற்றம் நடந்தது. விழாவை முன்னிட்டு அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி பஞ்சமூர்ததிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை விசாரணை வேளப்ப தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கோயிலின் நான்கு பிரகாரங்களிலும் கொடியேற்றப்பட்டது. இதில் சிவபுரம் வேதசிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார், கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர் கோயிலில் பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். தருமை ஆதீன கட்டளை விசாரணை சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் அன்பேசிவம் அறக்கட்டளை தலைவர் பாலச்சந்திர சிவாச்சாரியார், உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். மேலும், தெப்பக்குளம் காசிவிஸ்வநாதர், மார்க்கெட் காசிவிஸ்வநாதர் கோயில்களிலும் துலா உற்சவ கொடியேற்றம் நடைபெற்றது.