புதுப்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழா பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09நவ 2023 11:11
கம்பம்: க. புதுப்பட்டியில் மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. விழாவில் பக்தர்கள், மாவிளக்கு, அக்னி சட்டி, வண்டி வேஷம், முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செய்தனர்.
க.புதுப்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழா, புதுப்பட்டி மற்றும் அனுமந்தன்பட்டி ஆகிய இரண்டு கிராமங்களில் கொண்டாடப்படுகிறது. பால் வியாபாரி தடுக்கி விழுந்த இடத்தில் சுயம்புவாக அம்மன் இருந்ததால், இந்த திருவிழாவை இரண்டு கிராம மக்கள் கொண்டாடுகின்றனர். பால் வியாபாரி அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர். கிடைத்த இடம் புதுப்பட்டி . எனவே, இரண்டு ஊர்களிலும் கோயில் கட்டி ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கொண்டாடுகின்றனர். கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் அனுமந்தன்பட்டியில் திருவிழா முடிந்த பின், கடந்த நவ.1 தேதி புதுப்பட்டிக்கு அம்மன் கொண்டுவரப்பட்டது. அன்று முதல் நேற்று முன்தினம் வரை ஒருவாரம் திருவிழா நடைபெற்றது. மஞ்சள் நீராட்டம் , மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், அக்னிசட்டி எடுத்தல், வண்டி வேஷம், முளைப்பாரி ஊர்வலம் என பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றினர். ஒவ்வொரு நாளும் விதவிதமான அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழா முடிந்தவுடன் அம்மன் புறப்பட்டு அனுமந்தன்பட்டிக்கு சென்றார்.