பதிவு செய்த நாள்
12
நவ
2023
06:11
மாண்டியா:ஹிந்துக்களின் பாரம்பரிய பண்டிகையான தீபாவளியை, உலகின் பல்வேறு நாடுகளும் கொண்டாடுகின்றன. ஆனால், கர்நாடகாவின் மாண்டியாவில் உள்ள ஒரு கிராமத்தில், 200 ஆண்டுகளாக தீபாவளியை கொண்டாடுவதில்லை.
நம் நாட்டில் சிறப்பாக கொண்டாடும் பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்றாகும். பட்டாசு வெடிக்கலாம் என்பதால், சிறார்களுக்கு இது பிடித்தமான பண்டிகை. ஆனால் கிராமம் ஒன்றில், 200 ஆண்டுகளாக தீபாவளியை துக்க நாளாக அனுஷ்டிக்கின்றனர். இதற்கு திப்பு சுல்தானே காரணம். பெங்களூரில் இருந்து, 100 கி.மீ., துாரத்தில் உள்ள மாண்டியாவின் மேல்கோட்டை கிராமம் புண்ணிய தலமாக கருதப்படுகிறது. வைஷ்ணவ ஆச்சாரியரான ராமானுஜாச்சார்யா, 12 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் வசித்ததால், திருத்தலமாக கருதப்படுகிறது. செலுவராய சுவாமி கோவில் உட்பட பல முக்கிய கோவில்கள் இங்குஉள்ளன. மேல்கோட்டையில், அய்யங்கார் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இவர்கள் இன்றைக்கும், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதில்லை.
இந்த பகுதியில், 1600ல் உடையார் வம்சத்தினர் ஆட்சி நடத்தினர். மண்ட்யம் அய்யங்கார் சமுதாயத்தினர், செலுவராயசுவாமி கோவில் உட்பட மற்ற முக்கியமான கோவில்களை நிர்வகித்தனர். திப்பு சுல்தான் ஆட்சியில், மண்ட்யம் அய்யங்கார்கள், தீபாவளி பண்டிகையை கொண்டாட, ஸ்ரீரங்கபட்டணாவின் காவிரி ஆற்றங்கரையில் உள்ள நரசிம்ம சுவாமி கோவிலுக்கு வந்தனர். ஹிந்துக்களை வெறுத்த திப்பு சுல்தான், இவர்களை பழிவாங்க தீபாவளி பண்டிகை நாளே சரியானது என முடிவு செய்தார். அவர்களை கொல்லும்படி உத்தரவிட்டார். இதன்படி, 700 முதல் 800க்கும் மேற்பட்ட அய்யங்கார்களை, திப்பு படையினர் கொன்று குவிந்தனர். ஹிந்துக்களை அங்கிருந்து வெளியேறும்படி கட்டாயப்படுத்தினர். தீபாவளி நாளில் படுகொலை நடந்ததால், அவர்கள் வம்சத்தினர், இன்றும் தீபாவளி கொண்டாடுவதில்லை; துக்க நாளாக கருதுகின்றனர்.